மலையாளத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், ஹேமா கமிட்டி மூலம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் மற்ற இந்திய திரையுலகிலும் நடிகைகள் தாமாக முன்வந்து தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை ராதிகா, ஒரு மலையாளப் படத்தில் நடிக்கும் போது கேரவனில் ரகசிய கேமரா வைத்ததாக பகீர் சம்பவத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பாலியல் புகார் குறித்து சங்கத்தில் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் முன்னதாக அமைக்கப்பட்ட நடிகை ரோகிணி தலைமையிலான விசாகா கமிட்டி, தற்போது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. கேரளா விவகாரம் தொடர்பாக தமிழிலும் பாலியல் தொல்லை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட மற்ற முன்னணி நடிகர்கள் மௌனம் காக்கிறார்கள்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் திரையுலகில் பாலியல் தொல்லை நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் நடித்துள்ளேன். இதுவரைக்கும் எந்த ஒரு துன்புறுத்தலும் எனக்கு நடக்கவில்லை. தமிழ் திரையுலகிலும் இது போன்று எதுவும் நடக்கவில்லை. அதனால் ஹேமா கமிட்டி போல ஒரு கமிட்டி தமிழுக்கு தேவையில்லை. ஒரு வேளை பாலியல் துன்புறுத்தல் நடந்தால் அதற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ரொம்ப முக்கியமானது” என்றார்.