Skip to main content

“அவரைத்தான் ஃபிட்னெஸ் ரோல் மாடலாக பார்க்கிறார்கள்...” - கங்குவா பட அனுபவம் பகிர்ந்த வட்சன் சக்கரவர்த்தி

Published on 12/11/2024 | Edited on 12/11/2024
actor vatsan Chakravarthy interview

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படம்  வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தில் நடித்த வட்சன் சக்கரவர்த்தியை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையைப் பற்றியும் கங்குவா படத்தில் பணியாற்றிய அனுபவத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.   

வட்சன் சக்கரவர்த்தி பேசுகையில், “நான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது விளம்பர படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றத் தொடங்கினேன். எந்த சினிமா அலுவலகங்களுக்குச் சென்றாலும் உதவி இயக்குநருக்கான விண்ணப்ப படிவத்தை முதலில் கொடுப்பேன். அதன் பின்பு இரண்டு நாட்கள் கழித்து அதே அலுவலகத்தில் நடிகராக பணியாற்ற விண்ணப்ப படிவம் கொடுப்பேன். எப்படியாவது சினிமாவுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது அடிக்கடி வகுப்பை கட் அடித்துவிட்டு சினிமா அலுவலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். கல்லூரியில் கொடுத்த பஸ் பாஸ் எனக்கு சினிமா அலுவலகங்கள் செல்ல உதவியாக இருந்தது. என்னுடைய உதவி இயக்குநருக்கான விண்ணப்பப் படிவம் இன்றைக்கு வரை இயக்குநர் சரவணன் அலுவலகத்தில் இருப்பது அவருக்குத் தெரியாது. ஒருநாள் அவர் திடீரென என்னை அழைத்து எங்கேயும் எப்போதும் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.  

நடிகராக முதல் படத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. படம்தான் அந்த நடிகரைத் தேர்ந்தெடுக்கும் என்பதை நான் நம்புகிறேன் அப்படித்தான் எனக்கு எங்கேயும் எப்போதும் படம் கிடைத்தது. அந்த படத்தில் நடித்த பிறகு நிறைய நபர்கள் அதன் பிறகு ஏன் படம் பண்ணவில்லையென்று? கேட்டார்கள். சின்ன வயதில் சினிமாவுக்குள் வந்ததால் இந்த கேள்விகள் மன அழுத்தம் தரக்கூடிய வகையில் அமைந்து விடுகிறது. நான் எனது முதல் படம் நடித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்தபோது என்னுடைய அம்மா, அப்பாவிற்கே முதலில் நான் ஏன் அப்படி இருக்கிறேன் என்று புரியவில்லை. அப்போது எனக்கு வழிகாட்ட ஆள் இல்லை. சினிமாவில் பயணிக்க எத்தனை படங்கள் நடித்திருக்க வேண்டும் என்பது முக்கியமில்லை. நல்ல படங்களில் நடிப்பதுதான் முக்கியம். இந்த புரிதல் எனக்கு இருந்ததால் தான் அப்படியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அதனால்தான் இயற்கையாகவே லோகேஷ் கனகராஜ், ஸ்ரீ கணேஷ், முரளி கார்த்திக் போன்ற இயக்குநர்கள் உடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

ஒரு நடிகராக வரலாற்றுப் பின்னணியில் நடக்கும் கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படித்தான் கங்குவா படம் என்னை ஈர்த்தது. இந்த படத்தில் தாமதமாகத்தான் இணைந்தேன். படப்பிடிப்புக்காகப் போடப்பட்ட செட் வேலைகளைப் பார்க்க உள்ளே போனபோது, சின்ன வயதில் ஒரு ஊர் இருந்தது அந்த ஊரில்... என்ற கதை சொல்லிக் கேட்டிருப்போம். அந்த உணர்வை என்னால் உணர முடிந்தது. படப்பிடிப்புக்காகப் போடப்பட்ட செட்டினுள் இருக்கும்போது கங்குவா கதைக்களத்தில் இருக்கும் ஊர்கள் உண்மை என்று நம்பத் தொடங்கிவிட்டேன். அந்த அளவிற்கு எல்லாமே ரியலாக இருந்தது. எனக்கு இருந்த அதே உணர்வு கண்டிப்பாக ஆடியன்ஸூக்கும் இருக்கும்.

படத்திற்காக வேலை செய்யக்கூடியவர்கள் இயற்கையாகவே நல்லவர்களாகவும் உண்மையான உழைப்பாளிகளாகவும் இருந்தால் படத்திற்கு தேவையான அனைத்தும் கிடைத்து விடும். என்னைப் போன்ற நடிகராக இருப்பவர்களைவிட மற்ற யூனிட் ஆட்களை நினைத்து எனக்கு கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் நடிகர்களுக்கு முன்பு சென்று அனைத்து வேலைகளையும் படத்திற்காகச் செய்ய வேண்டும். அவர்களின் உழைப்பிற்கு பின்னால் கிடைக்கும் அனைத்து புகழும் நடிகர்களுக்கு கிடைக்கிறது என்பது ஒருபக்கம் சுயநலமாக இருந்தாலும் அத்தனை நபர்களும் நமக்காக உழைக்கிறார்கள் என்று பெருமையாகவும் இருக்கிறது. சூர்யா சாரை திரையில் எப்படி பார்த்தேனோ அதே மாதிரிதான் நிஜ வாழ்கையிலும் பிரதிபலிப்பார். அவரின் படங்களில் எனக்கு மெளனம் பேசியதே, உன்னை நினைத்து, வேல் உள்ளிட்ட படங்கள் ஏனக்கு பிடிக்கும். சூர்யா சாருடன் பேசாமல் தள்ளி நின்று அவரை பார்த்த போது, நான் சொன்ன படங்களில் வரும் சூர்யாவைப்போலத்தான் அவர் இருப்பார். எனக்குத் தெரிந்து தென்னிந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் ஃபிட்னஸூக்கான ஒரு ரோல் மாடலாக சூர்யாவைப் பார்க்கின்றனர். வாரணம் ஆயிரம் படம் பார்த்து 20 சதவிகித இளைஞர்கள் அவர்களின் சோகமான கட்டத்தை போதை பக்கம் திருப்பாமல் ஜிம்-க்கு சென்றுள்ளனர் என்றார்.

சார்ந்த செய்திகள்