Skip to main content

அப்பு கமல்ஹாசனுக்கு கலைஞர் கருணாநிதி விருது கொடுக்கையில் நடந்த சுவாரசிய சம்பவம்!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் ‘சினிமா டைரீஸ்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

உலக சினிமாவை எடுத்துக்கொண்டால் நடிகர்கள் இரண்டு வகை. ஒன்று, கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பான நடிப்பை வழங்கக்கூடியவர்கள். இரண்டு, ஹீரோயிச வகை நடிகர்கள். காப்பியங்கள், நாடகங்களில் இருந்த ஹீரோயிசம், ஒரு கட்டத்தில் மெல்ல சினிமாவிற்குள்ளும் நுழைய ஆரம்பித்தது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஹீரோயிச நடிகர் என்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எல்லா மொழிகளிலும் சினிமா நடிகர்களை இவ்வாறு வகைப்படுத்திவிடலாம். ஆனால், நடிகர் கமல்ஹாசன் இதிலிருந்து மாறுபட்டவர். அவருக்குள் எம்.ஜி.ஆரும் இருக்கிறார்; சிவாஜி கணேசனும் இருக்கிறார். நடிகர், இயக்குநர், கதையாசிரியர் என மாறுபட்ட தளங்களில் பணியாற்றியவர் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசனைப் பொறுத்தவரை நடிப்பு மட்டும்தான் அவருக்கு உலகம். அதைத் தவிர்த்து படங்களைத் தயாரித்துள்ளார். இவர்கள் இருவருமே தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மாபெரும் சிகரங்களாக இருந்தனர். இந்த இரு நடிகர்களின் எல்லா அம்சங்களையும் எடுத்துக்கொண்டதோடு பாடகர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என அவர்கள் செய்யாததையும் செய்துகாட்டிய மாபெரும் கலைஞனாக கமல்ஹாசனை நாம் கொண்டாட முடியும். 

 

சிறு வயதிலேயே எம்.ஜி.ஆர், சிவாஜியோடு இணைந்து நடித்து மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தைப் பார்த்த கமல்ஹாசன், திடீரென இருட்டிற்குள் சென்றுவிட்டார். அதனால் மனவேதனைக்கு ஆளான கமல்ஹாசன் நடனம், சண்டை என திரைக்குப் பின்னால் உள்ள விஷயங்கள் பலவற்றைக் கற்று மாபெரும் திரைக்கலைஞனாக மீண்டுவந்தார். கமல்ஹாசனை தவிர்த்து, சினிமா எனும் தொழில்நுட்பத்தை தன்னுடைய பன்முகத்திறமையால் ஆக்கிரமித்த ஒரு நடிகர் இந்தியாவில் இருப்பாரா என்றால் நிச்சயம் இல்லை. அப்படிப்பட்ட கமல்ஹாசனோடு எனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

 

நான் சென்னைக்கு முதன்முதலாக வந்திருந்தபோது ‘அபூர்வ சகோதர்கள்’ படத்தின் வெற்றிவிழா வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். நடிகை, நடிகை அனைவருக்கும் அவர் விருது வழங்கினார். பொதுவாக துணை நடிகர்களுக்கு விருது கொடுத்துவிட்டு பின்புதான் பெரிய நடிகர்களுக்கு விருது கொடுப்பார்கள். ஆனால், அன்று கமல்ஹாசனுக்கு தொடக்கத்திலேயே விருது கொடுத்துவிட்டார்கள். அதன் பிறகு பிற நடிகர், நடிகைகள் வரிசையாக விருதுபெற்றனர். அப்போது நடிகர் அப்புவிற்கு முதல்வர் விருது வழங்குவார் என மேடையில் அறிவிக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன், அப்பு கதாபாத்திரம்போல கால்களை மடக்கிக்கொண்டு குள்ளமான மனிதராக மேடை ஓரத்தில் இருந்தார். அங்கிருந்த அனைவருக்குமே அது ஆச்சர்யமாக இருந்தது. கலைஞர் கருணாநிதியே நேரடியாகச் சென்று அந்த விருதை அப்பு கமல்ஹாசனிடம் கொடுத்தார். அங்கிருந்தவர்கள் மத்தியில் பலத்த கைதட்டல். ‘தேவர் மகன்’ பட சமயத்தில்தான் ஒரு பத்திரிகையாளராக கமல்ஹாசனுடன் பேச எனக்கு வாய்ப்பு அமைந்தது. படத்தைப் பார்த்துவிட்டு உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுங்கள் என்றார்.

 

‘தேவர் மகன்’ படம் முடிந்து சில மாதங்கள் கழித்து ‘மகராசன்’ என்ற படத்தில் கமல் நடித்தார். ஜி.என். ரங்கராஜன் அந்தப் படத்தை இயக்கினார். நடிகர் கமல்ஹாசனும் பானுப்பிரியாவும் சேரி மாதிரியான ஓரிடத்தில் மறைவாக நின்று குளிப்பது மாதிரியான காட்சியை நகைச்சுவை கலந்து படமாக்கிக்கொண்டிருந்தனர். அன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்த எனக்கு இடைவேளை நேரத்தில் கமல்ஹாசனுடன் பேச சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது அவரிடம், “‘தேவர் மகன்’ மாதிரியான படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கு ‘மகராசன்’ மாதிரியான படம் தேவையா” என்றேன். அதற்கு அவர், “‘தேவர் மகன்’ மாதிரியான படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கு ‘மகராசன்’ மாதிரியான படமும் தேவை” என்றார். அவருக்கு கேள்வி சரியாகப் புரியவில்லை என்று நினைத்து மீண்டும் கேட்டேன். அவரும் அதே பதிலை மீண்டும் கூறினார். நான் மீண்டும், “சார்.. ‘தேவர் மகன்’ மாதிரியான பிரம்மாண்ட படத்தில் நடித்த கமல்ஹசானுக்கு ‘மகராசன்’ மாதிரியான படம் தேவையா” என்றேன். அவர், “‘தேவர் மகன்’ மாதிரியான பிரம்மாண்ட படத்தில் நடித்த கமல்ஹசானுக்கு ‘மகராசன்’ மாதிரியான படம் தேவைதான்” என்றார். நான் அவரிடம் மீண்டும் கேட்க ஆரம்பிப்பதற்குள் அருகில் இருந்த ஒரு கன்னட நடிகர் சாப்பிட போகலாம் என்று கூறி எங்களை அழைத்துச் சென்றுவிட்டார். பின்னாட்களில்தான் நான் கேட்ட அந்தக் கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானது என்று எனக்குப் புரிந்தது. மிகப்பெரிய படம் பண்ணும்போது அடுத்தடுத்து என்று ஏறிக்கொண்டே இருக்கக்கூடாது. அது ஒரு கலைஞனுக்கு நெருக்கடியையும் பயத்தையும்தான் கொடுக்கும். அதனால்தான் பிரம்மாண்ட படம், சாதாரண படம், காமெடி படம் என அவர் கலந்து கலந்து பண்ணியிருக்கிறார். அதில் கமல்ஹாசன் எந்த அளவிற்குப் புரிதலோடு இருந்தார் என்பதற்கு அவருடைய படங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் நமக்குத் தெரியும். 

 

 

சார்ந்த செய்திகள்