ரெட்டைச்சுழி, ஆண் தேவதை ஆகிய படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இயக்குநர் தாமிரா, கடந்த ஆண்டு கரோனா காரணமாக மரணமடைந்தார். அண்மையில் அவரது முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஆரி, "மாதா, பிதா, குரு, தெய்வத்திற்கு வணக்கம். நான் பேசும் தாய்மொழி தமிழுக்கும் வணக்கம். ஒவ்வொரு மேடையில் பேசும்போதும் இதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அதற்கு காரணம் தாமிரா சார்தான். முன்பு, எனக்கு பெரிய அளவில் வாசிப்பு பழக்கம் இல்லை. எனக்குள் நிறைய சிந்தனைகளை கிளறிவிட்டது அவருடைய எழுத்துகள்தான். தாமிரா சாரின் இயற்பெயர் தாவூத் என்பது அனைவருக்குமே தெரியும்.தாவூத் என்ற மதத்தின் அடையாளத்தில் தன்னுடைய கலைப்படைப்பினை தொலைத்துவிடக்கூடாது என்பதற்காக தன்னுடைய ஊரின் பெயரை தனது பெயரில் சேர்த்து வைத்துக்கொண்டவர்.
நான் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சமயத்தில் தாமிரா சாரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் அலுவலகத்திற்கு சென்று தாமிரா சாரை பார்க்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அவர் நான்தான் தாமிரா என்று கூறி என்னை உள்ளே அழைத்துச் சென்றார். சாப்பிட்டீங்களா தம்பி என்று கேட்டுவிட்டு நான் சாப்பிடவில்லை என்றதும் என்னை சாப்பிட வைத்தார். அப்போது நான் தாடி அதிகம் வைத்திருப்பேன். இவ்வளவு தாடியில் உங்க முகமே தெரியல தம்பி, நல்லா முகம் தெரியுற மாதிரி போட்டோ கொண்டுவாங்க என்றார். நான் வேறு ஒரு இடத்தில் ஆல்பம் கொடுத்திருக்கிறேன். இன்னொரு பிரிண்ட் போட என்னிடம் காசில்லை. அதை வாங்கிவந்து உங்களுக்கு கொடுக்கிறேன் என்றேன். ஒன்னும் அவசரமில்லை. பொறுமையாக கொண்டுவாங்க என்றார். நாடகத்துறையில் இருந்து வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும் மிகக்கண்ணியத்துடனும் மரியாதையுடனும் என்னை நடத்தினார்.
அவரின் ரெட்டைச்சுழி படத்திற்காக காத்திருந்தபோது, இந்தப் படத்தில் பாரதிராஜா சார் நடிக்க முடியவில்லை என்றால் இந்தப் படமே நடக்காது. அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை விட்டுவிட்டு இந்தப் படத்திற்காக காத்திருக்காதே என்று சிலர் சொன்னார்கள். அதை தாமிரா சாரிடம் சென்று சொன்னபோது, நான் சினிமாவிற்கு வந்தபோது எத்தனை பேர் உன்ன மாதிரி கிளம்பி வந்திருக்கான். உனக்கு வாய்ப்பு கிடைச்சிடுமா என்று என்னிடம் கேட்டார்கள். ஆனால், ஒரு படம் இயக்க இன்று ஆபிஸ் போட்டு உட்கார்ந்திருக்கிறேன். அவர்கள் இருவரையும் கொண்டுவந்து இந்தப் படத்தில் நடிக்க வைக்க என்னால் முடியும். அதே நம்பிக்கையோடு நீங்களும் இருங்கள் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.
தாமிரா சார் மறைந்துவிட்டாலும் அவரது எழுத்துகள் நம்மிடம் இருக்கின்றன. அவருடைய கதைகளை படமாக்கும் முயற்சியை நாம் செய்யவேண்டும். அதுதான் அவருக்கு செய்யும் நினைவஞ்சலியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.