25 ஆண்டுகள், 57 படங்கள், நடிகர், பைக் ரேசர், கார் ரேசர், போட்டோகிராஃபர் என்று பன்முகங்களைக் கொண்டவர் நடிகர் அஜித்குமார். தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் தனக்கான பாதையை தானே உருவாக்கியவர் அஜித். மெக்கானிக், ஒரு சின்ன பிசினஸ், மாடலிங் என்று தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகியுள்ளார். இன்று அஜித் எட்டியிருக்கும் நிலைக்கு வித்திட்டவை அவரது வெகு சில படங்களே.... வெற்றிக்கு இணையாக தோல்விப் படங்களும் கொடுத்துள்ள அவரது படவரிசையில் பின்வரும் படங்கள் கொடுத்த மைலேஜ் அதிகம்.
காதல் கோட்டை
அஜித், 'அமராவதி'யில் அறிமுகம் ஆகியிருந்தாலும், 'வான்மதி', 'ஆசை' என ஓரிரு வெற்றிகள் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய வெற்றி பெற்று மூலை முடுக்கெல்லாம் அவரைக் கொண்டு சென்றது அகத்தியன் இயக்கத்தில் வெளியான 'காதல் கோட்டை' திரைப்படம்தான். இன்று முகம் தெரியாமல் ஃபேஸ்புக்கின் மூலம் காதல் மலர்கிறது. ஆனால் 1996லேயே 'காதல் கோட்டை' படத்தில் கடிதம் மூலம் அஜித்தும், தேவயானியும் காதலிப்பார்கள். இறுதிக்காட்சியில் தேவயானி அனுப்பிய ஸ்வட்டரை அஜித் அணிந்திருப்பார், அதைப் பார்த்தவுடன்தான் தேவயானி ஓடிச்சென்று கட்டியணைப்பார். அப்பொழுது ரசிகர்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இத்திரைப்படம் 175 நாட்களுக்கும் மேல் ஓடி அஜித்திற்கு மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்தது. இதன் மூலம் அவருக்குப் பெண் ரசிகர்கள் அதிகரித்தனர்.
வாலி
இன்று அஜித் இரட்டை வேடத்தில் நடித்தாலே அந்தத் திரைப்படம் வெற்றிதான். ஆனால் அதற்கு ஆரம்பமாக இருந்தது வாலி. ஆசை படத்தில் உதவி இயக்குனராக எஸ்.ஜே. சூர்யா பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக வந்த தகவலை அடுத்து, எஸ்.ஜே.சூர்யா அஜித்திற்காகவே ஒரு கதையை தயார் செய்து அஜித்திடம் கூறியுள்ளார். கதை பிடித்துப் போக அஜித்தும் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தத் திரைப்படத்தில் இரண்டு அஜித் கதாபாத்திரம் வரும். இதில் இருவருக்கும் உள்ள வித்தியாசம் உடல் மொழி மட்டுமே. வசனங்கள் பேசினால் மட்டும்தான் வில்லத்தனத்தை காண்பிக்க முடியும் என்பதை உடைத்து தன் கண் அசைவினாலே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார். இரட்டை வேடத்தில் அஜித்தின் முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்று சிறந்த நடிப்பிற்கான முதல் பிலிம்பேர் விருதையும் பெற்றார். மேலும் இந்தப் படம் முடிந்த பின் தனது இயக்குனர் பைக்கில் செல்லக் கூடாது என்று கார் வாங்கிக் கொடுத்தார் அஜித்.
அமர்க்களம்
காதல் மன்னன் வெற்றிக்கு பிறகு அஜித்-சரண் கூட்டணியில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமர்க்களம். அமர்க்களம், அஜித்தின் வெற்றிப்படம் என்பதைத் தாண்டி அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் முக்கிய பங்காற்றியது. இந்த் திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் அஜித்துக்கும், ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
தீனா
அஜித்தை ஒரு மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் இதில் பார்த்தனர். இத்திரைப்படம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமாகும். இந்தத் திரைப்படத்தில் ஒரு பிரபல தாதாவின் தம்பியாக அஜித் நடித்திருப்பார். தீனாவில் மகாநதி சங்கர் அஜித்தை 'தல' என்று செல்லமாக அழைப்பார். இந்த 'தல' பட்டம் ரசிகர்களுக்கு பிடித்துப்போக இன்றளவும் அஜித்தை அவரது ரசிகர்கள் அன்பாக 'தல' என்றுதான் அழைக்கிறார்கள். இந்த 'தல' பட்டம் அஜித்திற்கு பிறகு தோனிக்கு வைத்து தமிழ்நாட்டு ரசிகர்கள் அழைக்கின்றனர். 'தல' என்ற வார்த்தை இந்தியா முழுவதும் பிரபலமானது. வெத... முருகதாஸ் போட்டது.
பில்லா
1980ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம்தான் பில்லா. ரஜினியின் 'பில்லா'வையும் 'தீ' படத்தையும் ரீமேக் செய்து நடிக்க வேண்டுமென்பது அஜித்தின் ஆசையாக இருந்தது. முதல் கட்டமாக இந்தப் படத்தை எடுக்க ரஜினியிடமும், தயாரிப்பாளரிடமும் அஜித் ஒப்புதல் வாங்கி நடித்தார். இந்தப் படத்தில் அஜித் மிகவும் ஸ்டைலிஷாக இருப்பார். மாஸாகவும், கிளாஸாகவும் இன்று இருக்கும் அஜித்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு பில்லாவுடையது. இதில் யுவன் அஜித்திற்கு போட்ட தீம் இசை இன்றும் பெஸ்ட்டாக நீடிக்கிறது. அஜித்தை மட்டுமில்லை, இன்றிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை உருவாக்கியதும் பில்லாதான்.
மங்காத்தா
தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு 50வது, 100வது படங்கள் முக்கியமாக கவனிக்கப்படும். ஆனால், முக்கிய நடிகர்களான ரஜினியின் நூறாவது படம், கமலின் நூறாவது படம், விஜயின் ஐம்பதாவது படம் ஆகியவை சரியாக ஓடவில்லை. ஆனால் அஜித்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா அவருக்கு சரியாக அமைந்தது. இதில் அஜித்தின் சால்ட் அண்ட் பேப்பர் லுக் எதார்த்தமாக ஒரு ஹாலிவுட் ஹீரோ போல் காட்டியது. இதில் அஜித் ஹீரோவும் இல்லாமல் வில்லனும் இல்லாமல் ஒரு ஆன்டி ஹீரோவாக நடித்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் நூறு நாட்கள் ஓடி நல்ல வசூல் ஈட்ட படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு முக்கியமான இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். அஜித், தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்த பின் வெளியான முதல் படம் மங்காத்தா.