லத்தீன் அமெரிக்கா ஏராளமான ஓட்டைகள் நிறைந்த சாக்குப் பையுடன் ஒப்பிடப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சொல்வதை நாம் நம்பினால், ‘பிரதிநிதித்துவ ஜனநாயகம்’, ‘முன்னேற்றத்திற்கான கூட்டணி’, ‘சர்வதேச நிதியம்’ மற்றும் ‘மனித உரிமைகள்’ போன்ற ‘செல்வங்களை’ இந்தச் சாக்குப்பையில் நிரப்புகிறது. பிறகு ஏன் லத்தீன் அமெரிக்கர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த அன்பளிப்புகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்?
இந்த முறையிலான நிரப்புதல்கள் சாக்குப் பையை வெடிக்கச் செய்தன. ஆம். குறிப்பாக, ஈகுவடார், டொமினிக்கன் குடியரசு, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் வெடித்துச் சிதறியது. லத்தீன் அமெரிக்காவில் ரத்தம் பீறிட்டுக் கொண்டிருக்கிறது.
ஈகுவடார் என்னைக் கவலையடையச் செய்கிறது. இந்த நாட்டோடு எனக்கு ரொம்பவும் ஒட்டுதல் இல்லை. ஆனால், ஈகுவடார் துறைமுகமான குய்யாய்க்குயிலில் நான் சில மணி நேரம் செலவழித்தேன். அந்த மணித்துளிகள், அந்த நாட்டின் மக்களது கவுரவத்தையும் அறிவையும் பார்த்து வியக்கச் செய்தது.
மலைகள் சூழ்ந்த அந்த சின்னஞ்சிறிய தேசம், ஆறுகளால் நிரம்பியது, ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது, விடுதலைக்கான அதன் போராட்டம் மிக நீண்ட வேர்களை கொண்டது.
சமீப வரலாற்றில் ஒரு ராணுவ கலகக் கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதன் பிறகு கொடூரமான ஆட்சியை நிறுவியது. அந்த ராணுவக் குழுவின் அட்டூழியம் நாட்டை சீரழித்தது. கம்யூனிஸ்ட் கட்சியையும், புரட்சிகர குழுக்களையும் தடை செய்தது. ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. உள்ளூர் குற்றவாளிகள் ஊக்கம் பெற்றனர். நகராட்சிகளின் சுயாட்சி முறை நீக்கப்பட்டது. பாரம்பரியமிக்க பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன அல்லது கடும் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டன.
அங்கு பணியாற்றிய பேராசியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பிரபலம் வாய்ந்த கலாச்சார போராளி பெஞ்சமின் கோரின் நடத்திய கலாச்சார மையமும் மூடப்பட்டது. புகழ்மிக்க நாவலாசிரியர் என்ரிக் கில் கில்பர்ட் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இதர பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறிவு ஜீவிகளைப் போலவே அவரும் தற்போது சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருக்கிறார். இன்னும் பலர் நாடு கடத்தப்பட்டு விட்டனர்.
இந்த உண்மைகள் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மற்றும் கலாச்சார பணியாளர்களின் இதயங்களில் கோபத்தை விதைத்துள்ளன. செயல்பாட்டில் இறங்க தூண்டுகின்றன. நாங்கள் எங்களது சக தேசத்தின் துயரத்தை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. மனித மாண்பும் கலாச்சாரமும் சீர்குலைக்கப்படுவதற்கு எதிராக நான் குரல் கொடுக்கிறேன். இந்தக் கண்டம் முழுவதும் உள்ள அறிவு ஜீவிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறேன். ஈகுவடார் தனது துயரமான சூழ்நிலையை எதிர்கொண்டு விடுதலையையும் மனித உரிமைகளையும் மீண்டும் மகத்தான போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன்.
(1963ல் ஈகுவடார் நாட்டை ராணுவக் கும்பல் கைப்பற்றியது. ஆனால், அந்த கும்பலின் அட்டூழியத்துக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். 1966ல் மக்கள் புரட்சி காரணமாக அந்த ஆட்சி தூக்கியெறியப்பட்டது.)
-கம்சமோல்ஸ்கயா பிராவ்தா, டிசம்பர் 14, 1963.
முந்தைய பகுதி:
சோவியத் யூனியனின் ஞானம்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 21