இந்தியாவையே உலுக்கிய சம்பவமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இறந்தது குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
டெல்லி தலைநகரில், உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இறந்தது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் இருந்த 11 டைரிகளை மீட்டு விசாரணை நடத்துகிறார்கள். அதில், கோபால் சிங்கின் இரண்டாவது மகனான லலித், இறந்து போன அப்பா கோபால் சிங்கின் ஆவி தனக்குள் புகுந்ததாகவும், தான் சொல்லும்படி அனைவரும் நடக்கும்படியும் கூறி அந்த குடும்பத்தையே தன் கட்டுக்குள் கொண்டு வந்து ஒவ்வொரு நாளும் நடக்கக்கூடிய சம்பவங்களை அந்த டைரிகளில் குறிப்பிடுகிறார். இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...
லலித்துடைய கண்ட்ரோலில் தான் அந்த குடும்பம் முழுவதும் நடந்துகொண்டு இருக்கிறது. ராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்ட கோபால் சிங்கின் குடும்பம், பாட்டியா வகையறாவைச் சேர்ந்த நாராயணி தேவியை திருமணம் செய்து கொண்ட பிறகு அவர், பொருளாதாரத்தில் முன்னேறுகிறார். ஹரியானாவில் 10 வருடமாக இருந்த பிறகு, தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு டெல்லிக்கு வருகிறார். கோபால் சிங்கின் மூத்த மகனான, தினேஷ் சிங் சவுதி அரேபியாவில் வேலைப் பார்த்து கிடைத்த வருமானத்தை கொண்டு ராஜஸ்தானிலே இருக்கிறார்.
இதற்கிடையில், குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி பல்வேறு இடங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். பிள்ளைகள் படிக்கும் ஸ்கூல், காலேஜ் என எங்கே விசாரித்தாலும், சந்தேகம்படும்படியான எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. கோபால் சிங் ஏற்கெனவே ஹரியானாவில் இருந்ததால், போலீசார் அங்கு சென்று லலித்தின் நண்பர் சந்திரபிரகாஷ் மேத்தாவை விசாரிக்கின்றனர். அதில், தானும் லலித்தும் ஒன்றாக மெடிக்கல் காலேஜில் படிக்கும் காலத்தில், டூவீலரில் சென்று கொண்டிருந்த போது லலித்துக்கு பயங்கரமான விபத்து நடந்தது. அந்த விபத்தில், லலித்தின் தலையில் அடிப்பட்டு சிக்கலாகி மீண்டு வந்துள்ளார். அதன் பிறகு, ஒரு தேர்வில் கலந்துகொள்ளும் நேரத்தில் லலித்துக்கு மீண்டும் உடம்பு சரியில்லாமல் போனது. அதனால், லலித் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டெல்லிக்கு சென்றுவிட்டார் என்று சந்திரபிரகாஷ் மேத்தா போலீசாரிடம் சொன்னார். விபத்து நடந்ததற்கு பிறகு, நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்த போது லலித் அந்த இடத்திலே தூங்குவார் என்றும் சந்திரபிரகாஷ் சொன்னார்.
டெல்லிக்கு வந்த பிறகு, லலித் ஒரு பிளைவுட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடைக்காரருக்கும், லலித்துக்கும் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையில், லலித் மீது பிளைவுட்களை போட்டு கடைக்கு தீ வைத்து சென்றுவிட்டார். இதில் பதற்றமடைந்த லலித், தன்னுடைய அண்ணனுக்கு போன் போட்டு அழைத்ததன் பேரில், பவ்னேஷ் உடனே சம்பவ இடத்திற்கு வந்து கடையை உடைத்து திறந்து லலித்தை மீட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களினால் ஏற்பட்ட தாக்கத்தினால், அதில் இருந்து லலித்துக்கு பேச்சு வராமல் இருந்துள்ளது. 2004இல் நடந்த இந்த சம்பவத்துக்கு பிறகு, லலித் யாரிடமும் பழகாமல் பேசாமல் வந்துள்ளார். அப்பாவுடன் சேர்த்து 4 ஆன்மாக்களை கரையேற்ற ஹரித்வாரில் உள்ள கங்கை நீரில் குளித்து பூஜை செய்ய வேண்டும் என்று இறந்துபோன அப்பா தன் மூலமாக சொன்னதாக லலித் அந்த டைரியில் குறிப்பிடுகிறார். லலித்துடைய மாமனார் ஜர்ஜன் சிங், பிரதிபாவுடைய கணவர் ஹீரா, சுஜாதாவுடைய மாமனார், மாமியார் ஆகிய 4 ஆன்மாக்கள் தன்னுடன் இருப்பதாக அப்பா சொன்னதாக எழுதுகிறார். மொத்தம் 5 பேருக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமென்றால், வட் செஸ்பத்யா என்ற பூஜையை செய்ய வேண்டும் என்று அப்பா சொன்னதாகவும் லலித் எழுதுகிறார். அந்த பூஜை தான், 11 பேரும் தூக்கில் தொங்கி இறந்துபோன பூஜை.
கயிற்றை அனைவர் கழுத்திலும் மாட்டிய பிறகு, கீழே கிண்ணத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் நீல நிறமாக மாறும் பொழுது, தான் அனைவரின் கயிற்றையும் அவிழ்ப்பதாக அப்பா சொன்னதாக லலித் எழுதியிருக்கிறார். அடுத்த நாள் வாழ்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் தான் அனைவரும் கழுத்தில் கயிற்றை மாட்டி இறந்திருக்கிறார்கள். இந்த வழக்கை டெல்லி காவல்துறையினர் மூன்று வருடமாக விசாரித்திருக்கிறார்கள். கடைசியில், இது கொலையோ அல்லது தற்கொலையோ அல்ல. இது மனப்பிறழ்வினால் ஏற்பட்ட நிலை தான் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆரம்பித்தில் லலித்துக்கு வந்த இந்த மனப்பிறழ்வு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கடத்திருக்கிறார்.