சிவபுரம் நடராஜர் சிலை திருட்டு வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி சுவாரசியமாக நமக்கு விவரிக்கிறார்.
நடராஜர் சிலையை லண்டனுக்கு அனுப்பியது ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். அந்த சிலை லண்டனுக்கு செல்வதற்குள் அது பற்றிய தகவல்களை அறிந்து இடையிலேயே மடக்கினர் ஸ்காட்லாந்து போலீசார். சிலையை லாயிட்ஸ் வங்கியில் கொண்டு போய் வைத்தனர். இந்தியாவுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் இந்திய அதிகாரிகள் நியூயார்க் விரைந்தனர். நியூ சைமன் பவுண்டேஷன் மீது வழக்குத் தொடர்ந்தனர். இவ்வளவு பணம் செலவழித்து வாங்கிய சிலையால் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்பதை அறிந்த சைமன் பவுண்டேஷன் நிறுவனத்தினர் எரிச்சலடைந்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.
ஒருகட்டத்தில் அவர்களுக்கே சலிப்பு ஏற்பட்டது. இந்திய அதிகாரிகளுக்கும் வழக்கு குறித்த செலவு அதிகரித்து வந்ததால் சலிப்பு ஏற்பட்டது. எனவே இரு தரப்பும் சமாதான உடன்படிக்கைக்குத் தயாராகினர். சிலையைப் பத்து ஆண்டுகளுக்குத் தாங்கள் வைத்துக் கொள்வதாகவும் அதன் பிறகு இந்தியாவிடம் ஒப்படைப்பதாகவும் ஒப்பந்தம் போட்டனர் சைமன் பவுண்டேஷன் நிறுவனத்தினர். அதன்படி 1986 ஆம் ஆண்டு சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பிறகு தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பான இடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டது.
இது சம்பந்தமான வழக்கை ராமகிருஷ்ணன் தொடர்ந்து விசாரித்து வந்தார். இடைப்பட்ட காலத்தில் பலர் இறந்து போனாலும் இறுதியில் நான்கு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றனர். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு அதன் பிறகு எடுத்த பாதுகாப்பு நடைமுறை மிகவும் சரியானது. அதுபோலவே மக்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்கிற எண்ணமும் பாதுகாப்பு உணர்வும் இருக்க வேண்டும். பல நேரங்களில் கோவில் சிலை காணாமல் போனால் மக்கள் கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர்.
சிலைகள் எந்த நாட்டைச் சேர்ந்தவையோ அந்த நாட்டிடமே அவற்றை ஒப்படைத்துவிட வேண்டும் என்று யுனெஸ்கோ ஒரு சட்டம் போட்டிருக்கிறது. அந்த வகையில் சிலைகள் தானாகவும் ஒப்படைக்கப்படுகின்றன. நாம் அங்கு சென்றும் கண்டுபிடிக்கிறோம். சிலை கடத்தல் தடுப்பு குறித்து சிறப்பு சட்டங்களை நாம் உருவாக்க வேண்டும். இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சிலைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவது காவல்துறையின் கடமை என்று மட்டும் நினைக்காமல் உள்ளூர் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இதைச் செய்தால் நம்முடைய கலைப் பொக்கிஷங்களை நம்மால் பாதுகாக்க முடியும்.