Skip to main content

ஆபாசப் படம் பார்க்கும் மகன்; விவாகரத்தான அப்பாவின் அவஸ்தை - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :15

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
parenting-counselor-asha-bhagyaraj-advice-15

விவாகரத்து வாங்கிய சிங்கிள் பேரண்ட் உடன் வளரும் குழந்தைகளை உளவியல் ரீதியில் எவ்வாறு பாதிப்படைவார்கள் என்பதை ஒரு கவுன்சிலிங் மூலம் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் விவரிக்கிறார்.

அப்பா, அம்மா இருந்தும் குழந்தை வளர்ப்பில் நிறைய சிக்கல்கள் என்றிருக்க, இதில் சிங்கிள் பேரெண்டிங் என்று வரும்போது, எப்படி கையாள வேண்டும் என்றே தெரிவதில்லை. மகன் மூன்றாவது படிக்கும்போதே அப்பா விவாகரத்து வாங்கியவர். தற்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவன் பார்ன் வீடியோவுக்கு அடிமை ஆகி இருக்கிறான். அதை எல்லோர் முன்னிலையிலும் மறைக்காமல் தனக்கு பிடிக்கிறது பார்க்கிறேன் என்று ஒத்து கொள்ளவும் செய்கிறான். 24 மணி நேரமும் பார்ப்பது மட்டுமின்றி, பள்ளிக்கும் செல்வதில்லை. இதற்காக மருந்தும் எடுத்து கொண்டு இருந்தும், மன ரீதியாக ஆதரவு தேவைப்படும் போது, என்னை தொடர்பு கொண்டார்கள். ஒரு அப்பாவாக தனக்கு இதை இப்படி சரி செய்வது என்றே தெரியவில்லை என்றும், தன் மீதும் தவறு இருப்பதையும் ஒத்துக் கொள்கிறார். தனக்கு விவாகரத்து கிடைக்கவே எட்டு வருடங்கள் ஆனதாகவும், அப்போது தன்னிடம் பெரிதாக வருமானம் இல்லாததால், சொந்தக்காரர்கள் வீட்டிலும், தன் அம்மாவிடம் விட்டும் தான் பையனை பார்த்து கொண்டதாகவும் கூறினார். வீடியோ பார்க்கும் போதையை வெளிப்படையாக கூறியபோது தான் இவருக்கே தெரிய வருகிறது. 

வீடியோஸ் மட்டுமின்றி, பெண்களிடம் எப்படி அணுகவேண்டும், எப்படி பேசவேண்டும், என்று ஆன்லைனில் வரும் ஆப்ஸ் முதற்கொண்டு பயன்படுத்துத்ல் முதல், வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் எப்படி பேசவேண்டும் என்று ஓப்பனாக சந்தேகம் கேட்கும் அளவுக்கு வந்தாயிற்று. வீட்டில் அறையில் போனை பிடுங்கி அடைத்து விட்டோம் என்றார். நான் முதன்முறை அந்த குழந்தையிடம் இரண்டு செஷன்களில்  பேசும்போது, அவ்வளவு இனிதாக, காமெடியாக பேசுவது முதல், மிமிக்கிரி செய்வது, நடித்து காட்டுவது என்று அவ்வளவு குறும்பாக பேசியது. வீடியோஸ் பார்ப்பது பற்றி ஒன்றுமே பேசவில்லை. மூன்றாவது செசனில் தான் நான் மெல்ல அணுகினேன், "இவ்வளவு நேரம் பேசுகிறோமே, ஏன் வாரநாட்களில் மட்டுமே பேசுகிறோம்? நீ ஸ்கூல் போகவில்லையா?'' என்று கேட்க, தனக்கு விருப்பம் இல்லை என்று எளிதாக பதில் வந்தது. ஆனால் அடுத்து நீ டிகிரி வாங்கவேண்டும், எதிர்கால கனவு என்று எதுவும் இல்லையா? என்று கேட்டதற்கு, "எனக்கு ஆர்ட்டிஸ்ட் ஆகவேண்டும்", என்று பதில் வந்தது. 

ஆர்ட்டிஸ்ட் ஆகவேண்டும் என்றாலும் அதற்கும் படித்திருக்க வேண்டுமே என்று கேட்டபோது, அதுவரை இயல்பாக இருந்த அந்த குழந்தையின் முகமே மாறிவிட்டது. ஏன் ஸ்கூல் போகவில்லை என்பதற்கு பதிலே இல்லாமல் அமைதியாக இருந்தது. நிறைய நேரம் கொடுத்த பிறகு, அவன் கேட்ட கேள்வி, "அம்மா இல்லாமல் ஒரு குழந்தை வளர முடியாதா?" என்பது தான்.  நான் சொன்னேன், "ஏன் முடியாது, அப்பா உனக்கு சப்போர்டிவ் தானே" என்றதற்கு, "என் அப்பா சப்போர்டிவ் என்று யார் சொன்னார்கள்? என்னை என் அப்பா கண்டுகொண்டதே கிடையாது. உன் அம்மா சரி கிடையாது, குணம் இல்லாதவள், அதனால் தான் உன்னை விட்டுட்டு போய்விட்டாள் என்று கூறுகிறார்கள். நான் என் அம்மாவைப் பார்த்ததே கிடையாது. ஒரு முறை தான் பேசவேண்டும் என்று நம்பர் கேட்டேன். ஆனால் யாருமே எனக்கு கொடுக்கவில்லை. அப்பா என்னிடம் நேரம் செலவழித்த ஞாபகமே இல்லை. இப்பொழுது ஒரு மாதமாகத் தான், என்னை வெளியே கூட்டி செல்கிறார். இவ்வளவு நாள் நான் அத்தை வீட்டிலும், சித்தப்பா வீட்டிலும் இருந்தபோது வந்து என்னை பார்க்கவே இல்லை. இதெல்லாம் யாருடைய தவறு? நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? என்னை இவ்வளவு பழி கூறிய அனைவரையும் நான் பழி வாங்கப் போகிறேன்." என்றது.

"என்ன பழி வாங்க  போகிறாய் , இனிமேல் தான் செய்யப் போகிறாயா? என்றதற்கு " நான் தப்பு செய்தால், என் குடும்பத்துக்கே அது அசிங்கம் தானே. நான் நிறைய அசிங்கமான வீடியோஸ்லாம் பாப்பேன். அது அவங்களுக்கு கூச்சமா இருக்கும், அடிக்க கூட வருவாங்க. ஆனால் எனக்கு அதப்பத்தி கவலை இல்லை. இப்படி நான் பேசி பேசி வெளில எல்லாருக்கும் தெரிஞ்சா அது அவங்களுக்கு அவமானம் தானே." இதனால் உனக்கென்ன கிடைக்கும் என்றால், "அது எனக்கு ஹாப்பியாக இருக்கிறது. என் அம்மாவே தப்பு பண்ணிருக்கட்டும், என்னை அம்மாவிடம் விட்டிருக்கலாம், அல்லது என் அப்பாவது  என்கூட நேரம் ஒதுக்கி இருக்கலாம். எனக்கு அதுவும் கிடைக்கவில்லை. ஸ்கூலில், மற்ற குழந்தைகளுக்கு அம்மா, அப்பா, என்று வரும்போது எனக்கு மட்டும் உறவினர் தான் வருவார்கள். நான் ஸ்கூலுக்கு போகவே மாட்டேன். நான் எப்படியாவது வீட்டை விட்டு வந்து  ஆர்ட்டிஸ்ட் ஆகிக் கொள்வேன்," என்றான்.

அதற்கு மேல் அந்த குழந்தையிடம் நான் பேசவில்லை. இது எல்லாமே ஆன்லைன் இல்லாமல் நேரடியாக பேசிய செஷன் என்பதால் தான் அந்த அக்குழந்தையின் மன பாதிப்பை உடல் மொழி மூலம் நன்கு கவனிக்க முடிந்தது. அந்த குழந்தை இப்படி செய்கிறது என்று தெரிந்தவுடன், அறையில் அடைத்தது முதல் தவறு. இப்படி செய்தால், போன் பிடுங்கி உடைப்பேன், கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் செய்வேன் என்று மனதை பாதிக்கும் அளவுக்கு பேசி இருக்கிறார்கள். நான் அந்த தந்தையை கூப்பிட்டு பேசினேன். நீங்களும் நிறைய பாதித்து இருப்பீர்கள் என்று ஏற்றுகொண்டாலும், அதை மீறி குழந்தையை எவ்வளவு பாதித்து இருக்கிறது. ஒரு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் வீடீயோஸ் பார்ப்பதால் என்ன நடக்கிறது, எல்லாருமே அதைப் பார்த்து, அதை கடந்து தான் வந்திருப்போம். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக பார்த்தால் என்ன நடக்கும் என்பதை அந்த குழந்தையிடம் சொல்லுங்கள். அந்த குழந்தையிடம் நிறைய தனித்திறமை இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வந்து, அதற்கான வகுப்புகளுக்கு சேர்த்து விட்டு மெல்ல ஸ்கூல் போவதன் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லுங்கள். ஒரு வருடம் வகுப்பு போனாலும் போகட்டும். ஆனால் இதிலிருந்து அவர் வெளியில் வர வேண்டும். நிறைய டிராமாஸ் கூட்டிக் கொண்டு போகுமாறு கூறினேன். அந்த குழந்தைக்கு நீங்கள் தான் பாலியல் கல்வி குறித்த புரிதலைக் கொடுக்கவேண்டும் என்றேன். 

நிறைய பெற்றோர்கள் இதை எப்படி பேசுவேன் என்று தான் தயங்குகிறார்கள். வீடியோஸ் பார்த்தாலே அந்த குழந்தையை ஷேம் செய்கிறார்கள். நிறைய புத்தகம் இருக்கிறது இது பற்றி. நாம் தான் குழந்தையிடம் பேச வேண்டும். மீண்டும் ஒரு மூன்று மாதம் கழித்து உனக்கு பார்க்க தோன்றுகிறதா என்று கேட்க வேண்டும். அப்படி பார்க்க தோன்றும்போது என்னவெல்லாம் அதற்கு மாறாக செய்யலாம் என்று உட்கார்ந்து பேச வேண்டும். இந்த செஷன் இன்று வரை நிறைய போய் கொண்டிருக்க காரணம், அந்த குழந்தையின் மனம் அவ்வளவு பாதித்து இருக்கிறது. அம்மாவிடம் பேசவேண்டும், பார்க்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை இருக்கிறது.  ஆனால் அவரின் குணத்தை பற்றி தப்பாக பேசியதாலே அவனுக்கு மனம் பாதித்து இருக்கிறது. எனவே அந்த அப்பாவிடம், இப்படி பேசும் உறவினரே வேண்டாம். உங்கள் குழந்தைக்கு நீங்கள் இருந்தால் போதுமானது. அவனிடம் நான் இருக்கிறேன் உனக்கு, எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம். இதிலிருந்து நீ வெளியே வரவேண்டும். இதைவிட உலகில் எவ்வளவோ இருக்கிறது, என்று கனிவோடு பேசுங்கள் என்றேன்.

நிறைய கேஸ் ஸ்டடி செய்து, இது போன்ற பாதித்த குழந்தைகளின் செய்தி கட்டிங்ஸ் கொடுத்து அவரைப் படிக்கச் சொல்லி எடுத்துச் சொன்னேன். இது போன்ற அடிக்சனால் தற்கொலை முயற்சி எண்ணம் கூட வந்திருக்கும். எனவே குழந்தையிடம் பேசுங்கள். இதெல்லாம் பேசுவதனால் தான்,தெரிந்து விடும் என்று கிடையாது. நாம் பேசுவது முன்பே இதெல்லாம் அவர்களுக்கே தெரியும். அந்த தந்தையிடம் பெரிய பண வசதி இல்லையென்றாலும், இப்போது அவர் குழந்தையின் திறமைக்கு வகுப்புகள் பார்ப்பது என்று விசாரித்து வருகிறார். பாலியல் கல்வி பற்றிய புரிதலை அந்த குழந்தையிடம் அவன் அப்பாவை வைத்தே தான் நான் கொடுத்தேன். இப்பொழுதுமே, தனக்கு பார்க்க தோன்றுகிறது என்றாலும், நேரத்தை குறைத்து கொள்வதாக கூறி இருக்கிறான்.  அவனிடம் நானும், உனக்கு ஆர்ட்டிஸ்ட் ஆகவேண்டும் என்றால், ரோல் மாடல் யார் என்று கேட்டதற்கு, சார்லி சாப்ளின் என்று கூறினான். அவரது புத்தகம் வாங்கி படி என்றிருக்கிறேன். 

குழந்தைகள் தவறு செய்யத்தான் செய்வார்கள். ஆனால் அடித்து திட்டினாலும் நாள் இறுதியில்  கடைசியில் அன்பை கொடுக்கத் தவறக்கூடாது.  கிரிமினல் மாதிரி ஒதுக்கி பார்க்க கூடாது. அந்த குழந்தையிடம் என்ன செய்தது கஷ்டமாக இருந்தது, என்ன தவறாக இருந்தது என்று பேசவேண்டும். பெற்றோர் மீது தவறில்லை என்றாலும், மன்னிப்பு கேட்டு இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். கண்டிப்பாக எல்லாமே சரியாகும்.

Next Story

குழந்தைக்குக் கொடுத்த பிரஸர்; டிப்ரசனுக்கு போன தாய் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :24

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
parenting counselor asha bhagyaraj advice 24

குழந்தைகள் பற்றியே யோசித்து தன் நிலையை இழந்திருக்கும் பெண்மணிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி  நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

என்னிடம் கவுன்சிலிங் வரும் குழந்தைகளுக்கு எவ்வளவு மெண்டல் ஹெல்த் முக்கியமோ அந்த அளவு அவர்களுடைய பெற்றோர்களுடைய மெண்டல் ஹெல்த்தும் முக்கியம். ஏனென்றால், அவர்களது மனவலிமையே குழந்தைகளுக்கு சென்றடையும். என்னிடம் வந்திருந்த அந்த பெற்றோர்க்கு குழந்தையின் படிப்பு, அவர்களது உலகத்தைச் சுற்றியே முழுமையாக இருபத்தி நான்கு மணிநேரமும் யோசித்து யோசித்து இப்போது அவர்களுக்கு தங்கள் குழந்தையைக் கண்டாலே பிடிப்பதில்லை. அவர்கள் அம்மா என்று அழைத்தாலே கோவம் வருகிறது என்றார். நான் இப்படி இருந்ததே இல்லை. அவர்களும் இப்போது என்னிடம் நெருக்கம் முன்பு போல காட்டுவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும் மேடம் என்று கவலையுடன் என்னைப் பார்க்க வந்திருந்தார்.

குழந்தைகளை இயல்பாக விட்டிருந்தாலே அவர்கள் நன்றாக தான் படிப்பில் நாட்டம் காட்டுகின்றனர். ஆனால், இப்போதுள்ள பெற்றோர்கள் அவர்கள் படிப்பில் சிறக்க ஒவ்வொரு பாடத்திலும் இன்னும் சிறப்பாக பயில நிறைய வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். அது குழந்தைகள் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் அவர்களது ஸ்ட்ரெஸ்ஸில் பங்கெடுத்து மிகவும் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். இந்தப் பெற்றோர்க்கு இரண்டுமே பெண் குழந்தைகள் வேறு. அவர்கள் பதின் வயதை அடைவதால் கண்டிப்பாக தன்னுடைய அரவணைப்பு அவர்களுக்கு வேண்டும் என்பது தெரிந்தாலும் தன்னால் முடியவில்லை என்றார். அவர்கள் பள்ளியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாரம் முழுவதும் தினசரி ஸ்பெஷல் வகுப்புகள் சேர்த்து அதைப் பற்றியே நினைத்து, அவரை பற்றி நினைக்காமல் உடல்நிலையே பாதிக்குமளவிற்குச் சென்றிருக்கிறார்.

அவரது உடல்நிலை கேடே அவரது உள்ளத்தையும் பெரிதளவு பாதித்து இருக்கிறது. சரியாக சாப்பிடுவது, தூங்குவது எல்லாமே மறந்து போய் பிடிக்காமல் இருந்தார். அவர் தன் குழந்தைகள் ஒன்றாவது வகுப்பு படிக்கும்போதே அவர்கள் பத்தாவதில் என்னவெல்லாம் செய்யவேண்டும், தான் வெளிநாட்டில் படிக்க இருந்து ஆனால் முடியாமல் போன இடத்தில் இவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று ஒரு நோட்டில் குறித்து வைத்திருந்திருக்கிறார். பின்னாடி மேலும் பேசியதில் தெரிந்தது, இவரது தந்தையும் இதே போலதான் தன்னைப் படிக்க வைக்கும் நடவடிக்கை இருந்ததாக குறிப்பிட்டார். இதுதான் அவரை அறியாமல் இவருக்கும் வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.

ஏதாவது ஆயுதம் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றெல்லாம் யோசித்திருந்திருக்கிறார். செல்ப் கேர் செய்திருந்தாலே அவர்கள் மனநிலை நன்றாக மாறும். ரொம்ப டிப்ரஷனாக இருந்தார். என்னுடைய காணொளியை மூன்று மாதமாக பார்த்து வந்தாலும், இதனை எப்படி போய் பேசுவது என்று காலம் தள்ளியதாகவும், ஆனால், இனிமேல் தாமதிக்க கூடாது என்று தான் வந்ததாக சொன்னார். அவருமே தன் பள்ளி, கல்லூரி படிப்பிலும், அரசு தேர்விலும் கூட சிறந்து விளங்கி இருந்திருக்கிறார். அதனால்தான் தன்னைப் போலவே தன் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்று இப்படி செய்து வந்திருக்கிறார் என்று புரிந்தது. நான் முதலில் அவர் கணவனை அழைத்து பேசினேன். இவர் தற்கொலை எண்ணம் எல்லாம் தன் மனைவிக்கு வந்திருந்தது என்பதை அறியாமல் இருந்திருக்கிறார்.

பொதுவாகப் பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனில் நிறைய மாற்றங்கள் உடலில் ஏற்படும். அதைக் குடும்பத்தில் நிறையப் பேர் புரிந்து கொள்கின்றனர். சில நேரங்களில் உதவி தேவை என்றால் நமது கணவனிடம் நாம்தான் எடுத்து சொல்லவேண்டும். அப்படி சில வருடங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதே இது ஒரு வகை விளைவு என்று சொல்லலாம். இதை உணராத அந்தக் கணவரிடம் அவருடைய மனைவிக்கு என்று ஏதும் செய்து கொடுக்குமாறும், கூட சிறிய நடைப்பயிற்சி, அவருக்கு போக நினைத்த வேலைக்கென்று அனுப்பி வைக்குமாறு சொன்னேன். ஆரம்ப காலங்களில் வேலைக்கு செல்லவேண்டாம் என்று கூறியிருந்த அவர், இப்போது தன் மனைவியின் நிலை அறிந்து வேலைக்கு அனுப்ப ஒத்துக்கொண்டார். அந்தப் பெண்மணிக்கு கல்லூரியில் பேராசரியாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. எனவே அதற்கு ஆதரிப்பதாக சொன்னார்.

இவருக்கு மூன்று செஷனுடன் முடிந்தது. வாரம் ஒருமுறை பாலோ அப் மட்டும் செய்து வருகிறேன். குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கவேண்டும்தான். ஆனால், குழந்தைகளிடம் மட்டுமே நேரம் ஒதுக்க வேண்டும் என்பது தான் தவறு. தன்னால் முடியாத போது அதைக் குழந்தைகளுக்கும் கணவருக்கும் எடுத்து சொல்லலாம். அவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் உலகத்தில் தங்கள் உலகத்தை இழந்து விடாமல் தனக்கென்று சிறிது மீ டைம் எடுத்துக்கொள்ளுதல் பெற்றோர்களுக்கு அவசியம்.

Next Story

பொறாமையால் நண்பன் செய்த செயல்; மன உளைச்சலான மாணவன் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :23

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
parenting counselor asha bhagtaeraj advice 23

கூடா நட்பினால் மனமுடைந்திருக்கும் மகனுக்கும், பெற்றோருக்கும் கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

என்னை ஒரு பெற்றோர் சந்திக்க வந்திருந்தனர். அவர்களது பதினோராம் வகுப்பு படிக்கும் மகன் ரொம்ப சாதாரணமாக தான் பழகி வந்ததாகவும், கொஞ்ச நாட்கள் முன்பிலிருந்து தனித்து வித்தியாசமான நடவடிக்கை கொண்டு இருப்பதை கவனித்து கவலையுடன் என்னிடம் சொன்னார்கள். மேலும் அவர்களது மகன் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாகவும், அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதாகவும், ஒருநாள் எதார்த்தமாக பார்த்தபோது அதில் வயதுக்கு மீறின பேச்சும், ஆபாச வார்த்தைகளுமான பேச்சுவார்த்தை (சேட்டிங்) இருந்ததை பார்த்ததும் அதிர்ந்து, அவனிடம் கடிந்து கேட்டிருக்கின்றனர்.

கேட்டதற்கு அதுபோல தான் பேசவில்லை. அது தன் நண்பன் என சொல்லியிருக்கிறான். அந்த இன்னொரு பையனை பெற்றோர்க்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களால் நம்பமுடியவில்லை. தன்னுடைய அக்கவுண்ட் தகவல் நண்பனுக்கு தெரியும் என்பதால் தன்னுடைய பெயரை இப்படி தவறாக உபயோகித்து உள்ளான் என்று சொல்ல, அதை அந்த பையனின் பெற்றோரிடம் சொல்லிவிட்டனர். பிறகு தான், இவன் மீது இருக்கும் பொறாமையால் அப்படி செய்திருக்கிறான் என்று தெரியவந்தது. அதை இந்த பையனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிக நெருங்கிய நண்பனே இப்படி செய்ததால் அவனால் சரியாக தூங்க முடியாமல், படிப்பும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கவலைப்பட்டு அழைத்து வந்திருந்தனர். அவன், அடுத்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு கூடவே நீட் தேர்வு எழுத இருப்பதாலும் மிகவும் வருத்தப்பட்டனர்.

நான் அவனிடம் முதல்படியாக அவனது சமூக வலைத்தள முகவரியை மூடச் சொல்லி அவனது நண்பனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், நினைவுகள் அனைத்தையும் அழித்து விட சொன்னேன். பிடிக்காத விஷயத்திலிருந்து முதலில் வெளி வருமாறு சொல்லி, பிடித்த ஐந்து விஷயங்களை பற்றியும், கனவுகள் பற்றியும் எழுதச் சொன்னேன். அதிலும் தன் நண்பனை சேர்த்து தான் குறிப்பிட்டிருந்தான். எல்லா நினைவுகளும் விளையாட்டு முதல் சேர்ந்து சென்ற இடங்கள் வரை தன் நண்பனை சேர்த்து தான் பேசினான். அந்த அளவு பாதித்திருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் இனிமேல் தான் எப்படி நல்ல நண்பனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டான். இப்போது அவனை பற்றி மட்டும் குறித்து யோசிக்க வேண்டும் என்றும் செல்ப் லவ் பற்றி எடுத்து சொன்னேன். இப்போது அவன் பள்ளியையும் மாற்றி விட்டார்கள்.

எனினும் கடந்த காலம் மொத்தமாக அவனிடமிருந்து அழிக்க வேண்டும் என்பதால் சிறிது காலம் எடுக்கத் தான் செய்யும். ஆனால் படிப்பை பொறுத்தவரை அவன் சீக்கிரமாக எல்லாமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருக்கிறான். பொதுவாக கவுன்சிலிங் வரும் குழந்தைகளை நான் பார்த்தவரை, குறிப்பாக பத்து, பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியை முழுமையாக நிறுத்தி விடுகின்றனர். அதற்கேற்றாற் போல அவர்களது படிப்பின் நேரமுறைகளும் அப்படிதான் இருக்கிறது. எனவே ஹாப்பி ஹார்மோன்ஸ் சுரக்கவே வாய்ப்பில்லை. அந்த பெற்றோரிடம் பையனுக்கு பிடித்த ஸ்போர்ட்ஸில் சேர்த்து விடுமாறு சொல்லி அனுப்பினேன். அதுவே அவனை கண்டிப்பாக பழைய இயல்பான நிலைக்கு மாற்றி, ஸ்ட்ரெஸ் பிரீயாக கொண்டுவர முடியும். பெற்றோர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளின் நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அந்த வயதில் அவர்களுக்கு தப்பான நட்பு கண்டுபிடிக்க தெரியாமல் போனாலும், பெற்றோர்களால் கண்டிப்பாக அதை கண்டுபிடித்து தவறான பாதையிலிருந்து காப்பாற்ற முடியும்.