Skip to main content

20 நிமிடத்தில் நடந்த மேஜிக்; தங்க மங்கையான இளம்பெண் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 26

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
jay-zen-manangal-vs-manithargal- 26

கண் பார்வையற்ற ஜூடோ சாம்பியனுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

சேலத்தைச் சேர்ந்த பார்வையற்ற வீராங்கனை சுபாஷினி என்பவர் லண்டனில் நடக்க இருக்கும் காமன்வெல்த் பாரா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க செல்கிறார். கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருப்பவர். நாளை கிளம்ப இருக்கும் அவர், முதல் நாள் தன் கண்களை சரி பார்க்கச் சென்றிருக்கிறார். அந்த கண் மருத்துவர் எனக்கு நண்பர். அந்த பெண்மணியின் பதற்றம், பயம் கேட்டறிந்து என்னை தொடர்பு கொண்டு, ஒரு  கவுன்சிலிங் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். பொதுவாக கவுன்சிலிங்கிற்கு எடுக்கும் காலத்தை போல அல்லாமல், அந்த சூழ்நிலையை கணக்கிட்டு பார்த்தால் இவருக்கு நான் 20 நிமிடம் மட்டுமே கொடுக்க முடியும் என்று புரிந்தது. இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஏனென்றால் அடுத்து அவர் சேலத்திலிருந்து சென்னை செல்ல வேண்டும். இருக்கும் கால அவகாசம் மிக குறைவு. 

சவாலாக இருந்தாலும் என்னால் மறுக்க முடியவில்லை. சரி என்று நான் அவரை சந்திக்கிறேன். நேரடியாக என்ன பிரச்சனை என்று விரைவாக செஷன் ஆரம்பிக்கப்படுகிறது. தனக்கு புது நாடு செல்வது, முதல் விமான அனுபவம், அங்கு சந்திக்க இருக்கும் புதுவித போட்டியின் இடத்தின் சூழல், என்று அவருக்கு பதற்றமாக இருக்கிறது. நம் நாட்டின் விளையாட்டுத் துறை நிதிப்படி, கூட கோச் பயணிக்க கூடாது வேறு. இதெல்லாம் தான் அவருக்கு பயத்தை கொடுத்து இருக்கிறது. மிக படபடப்பாக காணப்பட்டார். நான் அவரிடம் நீங்கள் வெற்றிபெற போகிறீர்கள் என்பதை விளையாடும் போது எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்று கேட்டேன். கண் தெரியாது என்பதால் நம்மை போல அவரால் எதிராளியின் பலவீனத்தை அவர்களால் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. வெறும் உணர்தல் மட்டுமே. எதிராளியின் தோல்வியை நெருங்கும்போது, அவரின் கைகள் உதறல் எடுக்கும், அடுத்து உடல் வெப்பம் அதிகரித்து கைகளில் அதிகப்படியாக வேர்க்கும், இதை வைத்து அவர் தோற்க போகிறார் என்று உணர முடியும் என்றார்.

அடுத்து அவருக்கு சில விஷயங்களை எடுத்து சொல்கிறேன். உங்களுக்கு கண் தெரியுமா தெரியாதா என்றேன். என்ன சார் இப்படி கேட்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு தெரியாது என்றார். கண் தெரியாது என்றபோது நீங்கள் எங்கு இருந்தால் என்ன? உங்களுக்கு யு.கே, அமெரிக்கா என எல்லா நாடும் ஒன்று தானே. உங்களுக்கு இப்போது இங்கே என்னுடன் பேசி கொண்டிருப்பது எப்படி தெரிகிறது என்றேன். ஒரு இருட்டு படிதலோடு ஒரு அசைவு மட்டுமே வருகிறது என்றார். அப்போது உங்களுக்கு இதுதானே எங்கு சென்றாலும் என்றேன். நீங்கள் பார்க்கப் போவது எதிராளியின் கைகள் உதறல் எடுக்கிறதா, அடுத்து உடல் வெப்பம் அதிகரிக்கிறதா, கைகள் வியர்க்கிறதா என்பது தானே. உங்களுக்கு தங்கும் இடம், உணவு என்று எல்லாமே வழங்கப் போகிறார்கள். உங்கள் நோக்கம் அந்த மூன்று விஷயம் தானே. அது, வரும் வரை நீங்கள் விளையாடிக்கொண்டே இருக்க போகிறீர்கள் என்றார். உடனடியாக அவர் தெளிவு பெற்று சரி சார் நான் ரெடி என்றார்.

அந்த பெண்ணிற்கு அவரது கிராமத்தில் நிறைய எதிர்மறையாகவே பேசி இருக்கிறார்கள். இப்படி தெரியாத இடத்திற்கு சென்று எப்படி முடியும். கண் தெரிந்த எங்களுக்கே சிரமம், உன்னால் எப்படி பெண்ணாக இருந்து கொண்டு என்று நிறைய பயத்தை ஏற்றிவிட்டு அது அப்படியே அந்த பெண்ணிற்கும் வந்து விட்டது. அவருக்கு ஒரு குட்டி கதை சொன்னேன். மூன்று தவளைகள் தண்ணீர் பானைக்குள் இருக்கிறது. அது தெரியாமல் ஒருவர் பானையை பற்ற வைத்து விடுகிறார். இரண்டு தவளையும் தண்ணீர் சூடு ஏற ஏற இதமாக இருக்கிறதே என்று அங்கேயே இருக்கிறது. ஒரு தவளை மட்டுமே ஏதோ தவறாக இருக்கிறதே என்று உணர்ந்து, மற்ற தவளைகள் என்ன சொன்னாலும் கேட்காமல் மேலே வெளியே ஏறி வந்து விடுகிறது. அதை பார்த்து “உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து வெளியே வர முடிந்தது” என்று கேட்க, அதற்கு அந்தத் தவளை "அப்படியா? எனக்குக் காது கேட்காது" என்றது. இந்த கதையை சொல்லி நான் என் கவுன்சிலிங்கை முடிக்கிறேன்.

அவர் கிளம்பி செல்கிறார். விமானம் கிளம்பும்போது என்னை அழைக்க சொல்லி இருந்தேன். ஆனால் என்னால் பேச முடியாமல் போய்விட்டது. நடந்த அந்த காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில், அந்த  மாணவி தங்கப் பதக்கம் வென்றார். போட்டி முடிந்து எனக்கொரு வீடியோ அனுப்பி இருந்தார். எனக்கு மேட்டை மிதிக்கும் வரை நீங்கள் சொன்ன இந்த கதை மற்றும் நான் கவனிக்க வேண்டியது எது என்பது மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. என் கிராமத்தில் இருப்பவர்களை போன்று அல்லாமல், நானும் அந்த தவளை போல பானையிலிருந்து வெளியே வந்து மெடலை ஜெயித்த பின்னே வரவேண்டும் என்று இருந்தேன். மீண்டும் அந்த பானைக்குள் போகக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே இருந்தது என்றும், என் வாழ்நாளில் எப்போதும் நீங்கள் சொல்லியது தன்னால் மறக்க முடியாதது என்றும் சொல்லி இருந்தார். 

பொதுவாக கவுன்சிலிங்கில் தன்னை திருத்திக் கொள்ளவும், சொல்லும் விஷயங்களை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்து, கவுன்சிலிங் கொடுப்பவரும் திறமையாக இருந்தார்கள் என்றால் பத்து நிமிடம் கூட போதும். அதுபோல இவருக்கு 20 நிமிடம் மட்டுமே எடுத்தது. நான் கொடுத்த கவுன்சிலிங்கால் மட்டுமே அவர் வெற்றி பெற்றார் என்றால் இல்லை. அதற்கு பல காரணம் இருக்கலாம். அவருக்கு இவ்வளவு பயிற்சி எடுத்தோமே நம்மால் வெற்றி பெற முடியுமா என்பது தான். அதற்கு இந்த கவுன்சிலிங் துணை புரிந்தது என்று சொல்லலாம். அடுத்து 2024ல் ஒலிம்பிக்கிற்கும் அவர் செல்ல இருக்கிறார்.