Skip to main content

போலீஸ் துணையோடு நடக்கும் குற்றங்கள்; ஏற்றத்தாழ்வு நிறைந்திருக்கும் இடம் - சிறையின் மறுபக்கம்: 03

Published on 12/06/2023 | Edited on 16/06/2023

 

Nagendran - Siraiyin Marupakkam 03

 

14 வருட சிறைத் தண்டனை பெற்ற சந்திரமோகன் தன்னுடைய சிறை அனுபவங்களை 'சிறையின் மறுபக்கம்'  தொடருக்காக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அப்போது எனக்கு 23 வயது. சோமல் ராய் என்கிற ஒருவர் தனக்கும் தன்னுடைய முதலாளிக்கும் பண விவகாரத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதை அவரிடம் பேசித் தீர்ப்பதற்கு நாங்களும் உடன் வரவேண்டும் என்றும் அழைத்தார். எங்களுக்கும் பணம் தருவதாகக் கூறினார். நாங்கள் அவரை மடக்கிப் பணம் கேட்ட விவகாரம் எங்கள் மீதான வழக்காக மாறியது. எங்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட கைதிகளில் நாங்களும் சேர்க்கப்பட்டு வெளியே வந்தோம். எங்களைத் தூண்டிவிட்ட சோமல் ராய்க்கு ஒரு ஆயுள் தண்டனை தான் வழங்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் அவர் இல்லாமல் இருந்தது அவருக்கு சாதகமாக அமைந்தது. கஷ்டத்தில் இருந்த எங்களுக்குப் பணம் தருவதாக அவர் கூறியதால் அவருடைய வலையில் விழுந்தோம். இரண்டு லட்சம் கொடுப்பதாகச் சொன்னார்.

 

பெரும்பாலான குற்றங்கள் போலீசின் துணை இல்லாமல் நடக்காது. இங்கு அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றன. சட்டம் சோமல் ராயை நடத்திய விதத்திற்கும் எங்களை நடத்திய விதத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்தன. எங்களைப் போன்றவர்களுக்குக் கேட்க நாதியில்லை. சிறையில் பலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிறை நிர்வாகமே அவர்களை அப்படி மாற்றிவிடும். சிறையில் கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் எளிதாகக் கிடைக்கும். சிறையில் சில நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். அங்கு இருக்கும் நூலகம் கைதிகளை நல்லவர்களாக மாற்றுவதற்கான ஒரு வழி. பேரறிவாளன் மூலம் வாசிக்கும் பழக்கம் எனக்கும் ஏற்பட்டது. பல நல்ல புத்தகங்கள் படித்தேன். அவரோடு பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் நல்ல மனிதர். அவர் தவறு செய்திருப்பாரா என்கிற சந்தேகம் எனக்கு இன்றும் இருக்கிறது. 

 

சிறையில் ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம் இன்று வரை எனக்குத் தொடர்கிறது. நான் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை புத்தகங்கள் வாங்குவதற்கு செலவழிக்கிறேன். எல்லாருக்கும் எல்லாம் என்கிற நிலை இருந்தால் இங்கு யாரும் தவறு செய்யமாட்டார்கள். அடிப்படை வசதி கூட இல்லாமல் இங்கு பலர் இருக்கின்றனர். அந்த நிலையிலும் நல்லவர்களாக வாழ்கின்றனர். அதுதான் பெரிய விஷயம். சிறைவாசியாக வாழும்போது தான் அதன் கஷ்டம் தெரியும். சிறையில் நல்ல உணவு கிடைக்காது. ஏன் தவறு செய்தோம் என்கிற குற்ற உணர்ச்சி இன்று வரை எனக்கு இருக்கிறது. சோமல் ராயை சந்தித்ததால் என் வாழ்க்கையில் பல்வேறு இழப்புகளும் பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

 

இதுவும் ஒரு அனுபவம் தான். தவறு செய்யும் எண்ணம் வரும்போது தங்களுடைய குடும்பத்தை ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். வாழ்க்கையை சினிமா போல் நினைத்துக்கொள்ளக் கூடாது. அந்த நேரத்தில் கிடைக்கும் பணத்துக்காகத் தவறான நபர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். அது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வாழ்க்கை முழுவதும் பாதிக்கும்.