Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #9

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

marana muhurtham part 9

 

அத்தியாயம் -9

 

மனிதனின் பலமும் பலவீனமும் உணர்வுகளை  வெளிக்காட்டும்  இடங்களைச் சரியாகக் கையாள்வதிலேயே தெரிந்துவிடும்.

 

அறிமுகம் இல்லாத ஒரு பெண் தன்னிடம் வலிய வந்து ஏதோ பேசுகிறாள் என்றால், தன்னை வலையில் சிக்க வைக்கும் சூழ்ச்சியாக இருக்கும் என  உணர்ந்த  கவி, எதுவும் பேசாமல் ஃபோனை கட் பண்ணி, கால் வந்த எண்ணை  பிளாக் செய்தாள்.

 

கவியின் மனம் முழுவதும் தியாவின் மரணத்திற்கு காரணமானவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே நிறைந்திருந்தது. அவளின் நீட் கனவு கூட அவள் மனதில் இப்போதைக்குக் கானலாகிவிட்டது.

 

ஃபிளைட்டில் டெல்லி நோக்கி வரும் போது, கவியின்  கண்களில் "அவங்களை விடாத  கவி" என்று தியா கடைசியாகப் பார்வையால் சொன்னது தான், காட்சியாக ஓடியது.

 

சென்னையில் தியா தொடர்பாக நிறைய வேலைகள் இருக்கும் போது, டெல்லியில் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும்? என்ற எண்ணம் மனதைப் பிறாண்டியது. 

 

அறைக்கு வந்ததும் முதலில், களைப்பு தீர ஒரு  குளியல் போட்டாள். அடுத்து முதல் வேலையாக ஷாலுவுக்கு ஃபோன் பண்ணினாள்.

"ஹாய் டியர், டெல்லி போய்டியா" என்றாள் ஷாலு அக்கறையுடன். 

"வந்தாச்சுடி. உன்னிடம் ஒரு வேலை கொடுத்தேனே செய்தியா?" 

"தியா கிறுக்கியதைப் பற்றிதானே, விசாரிக்கறேன். நேரமில்லைடி. சாரி" என்று வழிந்தாள்.

"நீயெல்லாம் ஒரு ஃபிரண்டா? சரி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு. நான் நாளைக்கு சென்னை வரப்போறேன்" என்று கவி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, 

 

ஷாலு   பச்சை மிளகாயைக் கடித்தது போல "என்னடி சொல்ற? உன் படிப்பு என்னாவது? உங்க வீட்ல டவுட் ஆக மாட்டாங்களா?” என்று  அதிர்ந்தாள்.

”கொஞ்ச நாள்தான் சென்னையில் இருக்கப்போறேன்.  இன்னும் அதிக நாள் இருக்கு நீட் எக்ஸாமுக்கு. அதுக்குள்ள  படிச்சிடுவேன். எனக்கு இப்ப தியா இறப்புக்கான காரணம் தெரிஞ்சாகனும். அந்த அப்பாவிக்கு நடந்தது இன்னொருத்தருக்கு நடந்துடக்கூடாது. நான் வீட்டுக்குத் தெரியாமல் சென்னையில் தங்க, எனக்கு நீதான் பாதுகாப்பான இடம் ஏற்பாடு செய்யனும் டியர்" என்றாள் கவி.

"கவி, அதுக்குதான் க்ரைம் நாவல் அதிகமா படிக்காதன்னு சொன்னேன். கேட்டியா, எல்லா மொழியிலும் இருக்கும் க்ரைம் நாவலையெல்லாம் படிச்சிட்டு துப்பறியக் கிளம்பிட்டே , நம்மால் என்ன முடியுமோ அதை மட்டும் யோசி " என்று சற்று  அதட்டும் குரலில் சொன்னாள் ஷாலு.

"நானும் நல்லா யோசிச்சி பார்த்து, என்னால் முடியும்ன்னு நம்பித்தான் களம் இறங்கறேன். பெண்ணால் எல்லா வேலையும் செய்யமுடியும்ன்னு நிரூபிச்சிட்டாங்க. அப்படியிருக்க, துப்பறிவது மட்டும் முடியாத காரியமா என்ன? இப்ப பெண்களே நடத்தும் எத்தனையோ பிரைவேட் டிடெக்ட்டிவ் ஏஜன்ஸிகள் நிறைய வந்தாச்சு. அதனால் நீ என்னைக் குழப்பிக்கிட்டே இருக்காம, எனக்கு தங்க  ஒரு இடம் ஏற்பாடு பண்ணு. அதேபோல், எனக்கு உங்க அப்பாக்கிட்ட இருந்து,  உடம்பு சரியில்லைன்னு ரெண்டுவாரம் ரெஸ்ட் எடுக்கத் தோதா, மெடிக்கல் சர்டிபிகேட் வாங்கி, வாட்ஸ் அப்பில் அனுப்பு" என்று  கவி அதிகாரத் தொனியில் சொன்னாள்.

"ஏய், என்னவோ கோயம்பேட்டில் முருங்கைக்காய் வாங்கி அனுப்புங்கற மாதிரி சொல்றயே?  அப்பா ஏன் எதுக்குன்னு  நோண்டி நூடுல்ஸ் ஆக்கிடுவார். என்னால முடியாது"

"ஷாலு, மெடிக்கல் சர்டிபிகேட்டுன்னா அதை அப்பாதான் கொடுக்கனும்ன்னு இல்லை”

”என்னடி சொல்ற படுபாவி”

”புரிலையா? அப்பா லெட்டர் பேட்ல நீயே ஏதாவது ஒரு நோய் பேரைக் கிறுக்கி அனுப்பு" என்று கவி  யோசனை சொன்னாள்.

"என்னடி சொல்ற பயமா இருக்கு"என நடுக்கமாகச்  சொன்னாள் ஷாலு.

" பயப்படாத ஷாலு. உங்க அப்பாக்கிட்ட இருக்கும் பிரிஸ்கிரிப்ஷன் பேடில் இருந்து ஒரு ஷீட்டை எடுத்து, அதில்,  கூகுளைப் பார்த்து  எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு நோயின் பேரைக் கிறுக்கி, உங்க அப்பாவோட சைனைப் போட்டு, சீல்  போட்டு எனக்கு வாட்ஸ் அப் பண்ணு." என்று   பிறவி க்ரிமினலைப் போலவே சொல்லிக் கொடுத்தாள் கவி.

 

இரண்டு மணி நேரத்தில் பலமுறை கவிக்கு ஃபோன் பண்ணி, ஒரு வழியாக ஒரு டுபாக்கூர் மெடிக்கல் சர்ட்டிபிகேட் அனுப்பி வைத்தாள் ஷாலு.

 

இதற்கிடையில் ஷாலு, மேடவாக்கத்தில் இருக்கும் அவளுடைய அத்தைக்கு ஃபோன் பண்ணி, ”என்னுடைய தோழி நீட் கோட்ச் விஷயமாக வருகிறாள். ஒரு வாரம் உங்கள் வீட்டில் தங்கட்டும்” என அனுமதி வாங்கினாள். அந்த வீட்டில் அத்தை, மாமா மட்டுமே இருக்கின்றனர். அதனால்..” அதனால் என்னம்மா.. தங்கிக்கட்டும்” என்று கேட்ட உடனேயே க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்கள்.

 

கவி, தனது கோச்சிங் அகாடமிக்கு முறைப்படி மெடிக்கல் விடுப்புக்கான கடிதத்தை அனுப்பி வைத்தாள். அதன்பின்,  பிளைட் பிடித்து சென்னை வந்து, ஷாலு சொன்ன மேடவாக்கம் அட்ரஸுக்கு வந்தாள். 

 

அழகான பங்களா டைப் வீடு. வாசலில் வாதாம் மரம் ஓங்கி வளர்ந்திருந்தது.  அமைதியான சூழல். வீட்டிற்குள் நுழைந்தாள். ஷாலுவின் அத்தையும் மாமாவும் அன்பாக வரவேற்றனர். என்ன படிக்கிறே? எந்த ஊரு? அப்பா என்ன பன்றார்? என்றெல்லாம் கேள்விகளை அடுக்கி, அவளைப் பொய்க்கு மேல் பொய்யாகச் சொல்லவைத்தனர்.

 

அறிமுகப் படலம் முடிந்ததும். அவசரமாக ஒரு ஓலாவை புக் பண்ணி, வண்டியிலேயே கருப்பு பர்தாவை அணிந்துகொண்டு, ஒரு முஸ்லீம் பெண்ணைப் போல், வேளச்சேரியில் உள்ள ஒரு காபி ஷாப்பில்  வந்து அமர்ந்தாள். இரண்டு  கூல் காபியை ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தாள். 

 

சில நேரங்களில் அளவுக்கு மீறிய சுதந்திரமும் அனாவசிய சிக்கலில் கொண்டுபோய் நிறுத்துமோ? கவியின் இவ்வளவு  செயல்களுக்கும் பக்கபலமாக இருப்பது இவளிடம் இருக்கும் பொருளாதாரச் சுதந்திரம் தான். அது அவளை இன்னும் எப்படி எல்லாம் படாதபாடு படுத்தப்போகிறதோ?

 

பாய்பிரண்ட்க்கு  காத்திருப்பதைப் போல இரண்டு கண்கள் மட்டும் தெரியும்படி, துப்பட்டாவால் அக்கம் பக்கத்தை கவனித்தபடியே இருந்தாள். சிறிது நேரத்தில் பரபரப்பாக, இவளைப் போலவே கருப்பு துப்பட்டாவில் வந்த ஒரு பெண் உருவம், கவியை அடையாளம் கண்டு அவளை நோக்கி வேகமாக வந்து  அவளுக்கு எதிரில் அமர்ந்தது.

 

(திக் திக் தொடரும்)
 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #8