இந்தப் புரட்சி நடைபெற்ற சமயத்தில் சீனாவின் பேரரசராக இருந்தவருக்கு வயது ஆறு. ஆம். அவர் பெயர் பூ யி. சீனாவின் பேரரசராக இருந்த குவாங்ஸு 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து பேரரசி சிஸி சீனாவின் பேரரசர் பதவிக்கு இரண்டு வயது 10 மாதங்கள் நிரம்பிய பூ யி யைத் தேர்வு செய்தார். அப்போது சிஸியும் மரணப்படுக்கையில் இருந்தார். சாங்ஷாவிலும் யாங்ஸே பள்ளத்தாக்கிலும் நிலைமை படுமோசமாக இருந்தது. தலைநகர் பெய்ஜிங்கைப் பற்றியும் சீனாவின் மற்ற மாகாணங்களைப் பற்றியும் பல்வேறு வதந்திகள் பரவின. பெய்ஜிங் புரட்சியாளர்களிடம் வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், பேரரசரின் குடும்பம் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதாகவும் வதந்திகள் பரவின. மொத்தத்தில் நான்கு மாகாணங்களின் தலைநகரங்கள் மட்டுமே புரட்சியாளர்களின் வசம் இருந்தன. புரட்சியாளர்களுக்கு எதிராக சீன ராணுவம் போராடும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. சீன ராணுவத்தின் சக்திவாய்ந்த தளபதிகளுள் ஒருவரான ஸாங் ஸுன் நான்ஜிங் மாகாணத்தை முற்றுகையிட்டார். அங்கு புரட்சிப்படைகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடைபெற்றது. ஜெர்மனியிடம் இருந்து பெற்ற நெருப்புக் குண்டுகளை வீசி தலைநகர் ஹென்காவை சீன ராணுவம் நாசப்படுத்தியது.
கடைசியில் நான்ஜிங் மாகாணம் சீன ராணுவத்திடம் வீழ்ந்தது. புரட்சியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சடைகளைக் கத்தரித்துக் கொண்டிருந்த சீனர்கள் கண்டவுடன் கொல்லப்பட்டனர். மாவோவும், அவரைப்போல முடியை கத்தரித்துக் கொண்டிருந்த மற்ற இளைஞர்களும் ராணுவத்துக்கு அஞ்சி ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய நிலையில் மாவோ துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார். புரட்சிப் படையில் சேருவது என்ற தனது திட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டினார். ஒரு மாணவர் படை உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தப் படையின் பங்களிப்பு என்ன என்பது தெளிவாக்கப் படவில்லை. இந்நிலையில் சீன பேரரசரின் ராணுவத்திற்கு எதிராக குடியரசுப்படையில் சேருவது என்று முடிவு செய்தார். அவருடன் அவருடைய நண்பர்களும் குடியரசுப் படையில் சேர்ந்தனர். நான்ஜிங் மாநிலம் சீன ராணுவத்திடம் விழுந்து விட்ட நிலையில் ஹூனான் மாநிலத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அங்கு புரட்சியின் முதல் வாரங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடியரசுப் படையில் சேர்ந்தனர். அந்த வீரர்கள் சீன ராணுவத்தின் கையில் விழுந்த நான்ஜிங் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டனர். அதிலும் சீன ராணுவத்தால் சீரழிக்கப்பட்ட ஹென்கா நகரில் அவர்களுக்கு வேலை இருந்தது. ஹென்கா நகரம் ரத்தக் களறியாக மாறி இருந்தது. சீனப் பேரரசின் உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்கள் குடியரசு ராணுவ வீரர்களால் துண்டுதுண்டாக வெட்டி கொல்லப்பட்டனர். கலகப் படையினர் ஹென்கா நகருக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக மாவோ இருந்த படைப்பிரிவு அழைக்கப்பட்டிருந்தது. இந்தப் படைபிரிவினர் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் கலகக்காரர்களை எதிர்த்து அழித்தனர்.
இந்த சமயத்தில் சீனாவுக்கு ஒரு பேரரசர் இருக்கிறார் என்பதை நினைவூட்டும் வகையில் அறிக்கை ஒன்று வெளியானது. ஆறுவயதே நிரம்பிய பூ யி பெயரில் அந்த அறிக்கை வெளியானது. நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் அனைத்தும் எனது தவறால் ஏற்பட்டவை. விரைவில் சீர்திருத்தம் செய்வேன் என்று பூ யி தனது அறிக்கையில் உறுதி அளித்திருந்தார். பெய்ஜிங் புரட்சியாளர்களிடம் விழுந்துவிட்டது என்றும், பேரரசரின் குடும்பம் சிறையில் அடைக்கப்பட்டு விட்டது என்றும் பரவிய வதந்தி பொய் என்பதை இந்த அறிக்கை நிரூபித்தது. நான்ஜிங் மாகாணத்தின் முன்னாள் சட்டமன்ற கட்டிடத்தில் இருந்த நீதிமன்றத்தில் மாவோவின் படைப்பிரிவு முகாமிட்டு இருந்தது. மாவோவின் படைப்பிரிவில் இருந்த வீரர்கள் பலருக்கு எழுதப் படிக்க தெரியாது. அவர்கள் அதிகாரிகளுக்கு சிறுசிறு வேலைகளை செய்வதில் காலம் கழித்தார்கள். இந்த வீரர்களுக்காக மாவோ கடிதங்களை எழுதித் தருவார். எனவே அவர்கள் மத்தியில் மாவோ அறிமுகமாகியிருந்தார். முதன்முறையாக தொழிலாளர்களுடன் மாவோவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களில் ஒரு சுரங்கத் தொழிலாளியும், கொல்லரும் முக்கியமானவர்கள். மாணவனாக இருக்கும்பொழுதே ராணுவத்தில் சேர்ந்துவிட்டதால் மற்ற வீரர்களைப் போல அதிகாரிகளுக்கு தண்ணீர் சுமக்க மாவோவின் மனம் ஒப்பவில்லை.
எனவே தனக்காக தண்ணீர் சுமப்பதற்கு வேறு ஆட்களை நியமித்துக் கொண்டார். ராணுவத்தில் அவருக்கு 7 டாலர்கள் வழங்கப்பட்டன. இந்தப் பணத்தில் தண்ணீருக்கும் உணவுக்கும் செலவழித்தது போக மீதப் பணத்தை செய்தித்தாள்களை வாங்குவதற்காக செலவழித்தார். நான்ஜிங் மாநிலத்தில் சீனப் பேரரசின் ராணுவ வீரர்கள் விரைவில் தோல்வியை சந்தித்தனர். மஞ்சுக்களின் எதிர்ப்பு முடிவை நெருங்கியது. இந்நிலையில் சாங்ஷா நகரில் சீனர்களின் சடைகளை கத்தரிக்கும் நடவடிக்கை மீண்டும் தொடங்கியது. குடியரசு படைவீரர்கள் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்தார்கள். அப்போது நடந்த நிகழ்வுகள் பரிதாபகரமானதாகவும், நகைச்சுவை உணர்வு மிக்கதாகவும் இருந்தன. வெளியூர்களிலிருந்து சாங்ஷா நகருக்கு வருகிறவர்ளை குடியரசு படையினர்கள் வரவேற்பார்கள். பின்னர் அவர்களுடைய சடைகளை கத்தரிக்கோல் அல்லது வாள்களால் வெட்டுவார்கள். அப்போது அவர்கள் வீரர்களிடம் கெஞ்சுவார்கள்.
சிறுவயதிலிருந்து பராமரிக்கப்பட்டுப் பின்னப்பட்ட சடையை இழப்பது தங்கள் உடல்உறுப்புகளில் ஒன்றை இழப்பது போல கருதினார்கள். பலர் வீரர்களுடன் சண்டையிடவும் தயங்கவில்லை. விரைவிலேயே கிராமத்தினர் உட்பட மக்கள் அனைவரும் மஞ்சுக்களின் அடையாளமாக கருதப்பட்ட தங்களுடைய சடைகளை தாங்களாகவே வெட்டிக் கொண்டார்கள். அதேசமயம் அரசியலில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதை நினைத்து அஞ்சிய பலர் ஒரு போலிச் சடையை தங்களுடைய தலைப்பாகைக்குள் ஒளித்து வைத்து இருந்தனர். மஞ்சுக்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடுவார்களோ என்ற அவர்களுடைய அச்சம் நிறைவேறவில்லை. குடியரசு படையினரின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. கட்சியின் தலைவர் சன்யாட் சென் சீனா திரும்ப உதவி செய்தனர். அதே சமயம் எங்கிருந்து நிர்வாகத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்படவில்லை. கடைசியில் 1912ஆம் ஆண்டு அமெரிக்காவில் தங்கியிருந்த சென் நான்ஜிங் மாகாணத்தின் தலைநகர் ஹென்காவில் இருந்து நிர்வாகத்தை நடத்த முடிவு செய்தார்."
புத்தாண்டு தினத்தில் சீனாவின் முதல் குடியரசு தலைவராக சன்யாட் சென் பதவியேற்றார். சன்யாட் சென்னின் தலைமையை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதற்காக ஒரு பயண குழுவை அனுப்ப திட்டமிடப்பட்டது. சன்யாட் சென் பதவி ஏற்பதற்கு முன்னர் யுவான் ஷிகெய் என்வரை அரசு தலைவராக பேரரசர் நியமித்திருந்தார். அதேசமயம் பேரரசரும் பதவியில் நீடித்தார். பெய்ஜிங்குடன் சண்டையிடுவதற்கு தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வந்தன. ஆனால் சன்யாட் சென்னும் யுவான் ஷிகெயும் ஒரு உடன்பாடு ஏற்படுத்தினர். அதன்படி பேரரசர் பதவி விலகினார். இரண்டு நாட்கள் கழித்து யுவான் ஷிகெய்க்கு குடியரசு தலைவர் பதவியை சென் விட்டுக் கொடுத்தார். மாவோ இருந்த புரட்சிப்படையில் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்களில் ஏராளமானோர் விலக்கப்பட்டார்கள். புரட்சி முடிந்துவிட்டது என்று மாவோ முடிவுக்கு வந்தார். மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த விரும்பினார். ராணுவத்தில் ஆறு மாதங்கள் பணிபுரிந்த திருப்தியுடன் பாடப் புத்தகங்களை நோக்கி திரும்பினார். அவருக்கு புதியதோர் அனுபவம் காத்திருந்தது. அந்த அனுபவம் அவரை ஒரு தலைவராக பக்குவப்படுத்தியது.