Skip to main content

அவமதித்த ஆசிரியர் முன் குழந்தைகள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 18

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 jay-zen-manangal-vs-manithargal- 18

 

குஜராத்தில் ஒரு பள்ளி ஆசிரியருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியே ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

குஜராத்தில் உள்ள பழங்குடி மக்கள் வாழ்கின்ற பகுதியில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க சென்றிருந்தேன். அங்கே தானாகவே நடந்த ஒரு கவுன்சிலிங் பற்றி சொல்கிறேன்.  

 

குஜராத்தில் உள்ள பழங்குடி மக்கள் வாழ்கிற கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் சென்றேன். அங்கு எப்படி பயிற்சிகள் வழங்கப்பட்டது என்றால் நான் தமிழில் சொல்வேன். அதை ஒரு குஜராத் தன்னார்வலர் அங்குள்ளவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வார். சில சமயம் நகைச்சுவை சொன்னாலும் அது மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு புரிந்துதான் அவர்கள் சிரிப்பார்கள் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். இது எனக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

 

இந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு வகுப்பு டீச்சர், இந்த பழங்குடி பிள்ளைகளுக்காக நீங்கள் ரொம்ப மெனக்கிடல் செய்ய வேண்டாம் சார். இதுங்க எல்லாம் மதிய சோத்திற்காகத்தான் பள்ளிக்கூடமே வராங்க. சாப்டு போயிடுவாங்க. படிப்பின் மீதெல்லாம் பெரிய கவனம் செலுத்தமாட்டாங்க என்றார். இதை ஒரு ஆசிரியர் சொல்கிறார் எனும்போது ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் இருந்தது.

 

தமிழகம் போன்ற கல்வியில் முன்னுக்கு வந்துள்ள மாநிலங்களில் இருந்து சென்றவன் என்பதால் மட்டுமல்ல, இந்த கல்விதான் என்னை அங்கே கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. நாம் அந்த டீச்சருக்கு ஒரு போதனையை கவுன்சிலிங்காக கொடுத்தே ஆக வேண்டும் என்று தோன்றியது. அதை நேரடியாக செய்யாமல் எடுத்துக்காட்டோடு செய்தேன்.

 

நான் சொல்வதை மாணவர்களுக்கு அப்படியே சொல்லுங்கள் என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொன்னேன். என் பெயர் ஜெய். அழகாக உடை உடுத்தியிருக்கிற எனக்கு எழுத, படிக்க தெரியாது. என் பெயரையே எழுத தெரியாது. யாராவது எழுத சொல்லித் தருகிறீர்களா என்று கேட்டதற்கு அந்த வகுப்பில் இருந்த 14 பழங்குடியின மாணவர்களுமே நான் எழுத சொல்லித் தரேன் என முன் வந்தார்கள்.

 

அதில் ஆஷா என்ற சிறுமி உடனடியாக முன்வந்து, என் பெயரை அவர்களது மொழியில் எழுத கற்றுக் கொடுத்தாள். நான் வேண்டுமென்றே தவறு செய்தேன். அதையும் திருத்தினாள். எனக்கு எப்படி எழுத வேண்டும் என்றும், வாசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள். இதையெல்லாம் கவனித்த டீச்சர் என்னிடம் வந்து பேசினார். இந்த பழங்குடி மாணவர்கள் படிப்பார்கள் என்று எனக்கு தெரியாது சார் என்றார். ஆனால் இனி இவர்களுக்கு நல்லபடியாக சொல்லித்தரேன் என்று வாக்குறுதி அளித்தார். இந்த மனமாற்றமே எனக்கு பெரிதாக இருந்தது.