'அது ஆசிரியர்களுக்கான கழிவறை. நல்ல உயரமான, திடகாத்திரமான உடலமைப்பு கொண்ட மாணவன் ஒருவன் அங்கே சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட உடற்கல்வி ஆசிரியர் அவனைக் கண்டித்து 'இங்கிருந்து வெளியேறு' என்கிறார். "எனது வேலையை முடித்து விட்டு வெளியேறுவேன்" எனத் திமிருடன் பதிலளித்த அவன், சிறுநீர் கழித்து முடித்த பின்னரே அங்கிருந்து வெளியேறுகிறான். இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொள்கின்றனர். பள்ளிக் காலங்களில் உடற்கல்வி ஆசிரியருடன் முறைத்துக்கொள்ளுதல் மற்றும் மோதல் போக்கைக் கடைபிடித்த அனுபவம் நிச்சயம் நம் அனைவருக்கும் இருக்கும். அந்த நேரத்திலேயே நம் கண்ணம் சிவப்பதோ அல்லது பள்ளித் தலைமையாசிரியரின் அறை வாசலில் உப்புக்குவியலின் மீது முழங்காலிடுவதோதான் அதன்பிறகான முடிவாக இருக்கும். ஆனால், இந்த மாணவனுக்கு நடந்ததோ வேறு!
அன்று இரவு அம்மாணவனுக்கு தூக்கம் வரவில்லை. தான் நடந்து கொண்ட விதம் தவறு என அவன் ஆழ்மனது அவனுக்கு உணர்த்துகிறது. மறுநாள் காலை பள்ளிக்குச் சென்று முதல் வேலையாக அந்த ஆசிரியரைச் சந்தித்து மன்னிப்பு கேட்கிறான். அவரும், மன்னித்து விட்டு அவனோடு கை குலுக்குகிறார். அவருக்கு பேரதிர்ச்சி. அந்தப் பள்ளியில் யாருடைய கைகளிலும் இல்லாத கடினத்தன்மையும் வலுவையும் அவன் கைகளில் உணர்கிறார். ’எனக்காக ஒன்று செய்வாயா’ என அவர் கேட்க, அந்த மாணவனும் சரி என்கிறான். ’நாளை முதல் கால்பந்து விளையாட வந்துவிடு’ என்கிறார். ஆம்... 'ராக்' என்று உலகம் கொண்டாடும் டுவைன் ஜான்சனே அந்தச் சிறுவன். தொழில்முறை குத்துச்சண்டை வீரர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட ஆளுமையாக அவர் உருவாவதற்கு விதை போட்டது உடற்கல்வி ஆசிரியருக்கும் அவருக்கும் இடையே நடந்த அந்த கழிவறைச் சந்திப்புதான் என்றால் மிகையில்லை.
1972-ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மல்யுத்த வீரருக்கு மகனாகப் பிறந்தார் ராக். அவரது தந்தை, பெயர் சொல்லக்கூடிய அளவிலான வீரர் என்றாலும், குடும்ப சூழலை சமாளிக்கக் கூடிய அளவிலான வருமானத்தை அவரால் ஈட்ட முடியவில்லை. ராக்கிற்கு இளம் வயதாக இருக்கும் போதே அவரது பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட விவாகரத்து ராக்கை வெகுவாகப் பாதித்தது. அதன் பிறகு தனது தாயாருடன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த ராக், தனக்காக தன் தாய் எதிர்கொள்ளும் துயரங்களைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப்போடு, தன் கனவினை நோக்கி கடினமாக உழைக்கத் தொடங்கினார். சிறந்த கால்பந்தாட்ட வீரனாக வருவதே அவரது லட்சியமாக இருந்தாலும், காலம் அவரை ரெஸ்லர் என்றழைக்கப்படும் மல்யுத்த வீரராக்கியது. அதன்பிறகு, அவர் எடுத்த நடிகர் அவதாரம் உலகப் புகழின் உச்சாணிக்கொம்பில் அவரை நிறுத்தியுள்ளது.
தந்தையுடன்...
"அப்போது எனக்கு 14 வயது. நானும் என் அம்மாவும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினோம். நாங்கள் வாடகை கொடுக்காததால் வீட்டை விட்டு வெளியேறக் கூறி கதவில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. என் அம்மா கதறி அழுதுவிட்டார். என் வாழ்க்கையில் அத்தருணத்தை எளிதில் மறக்க முடியாது. ஏனென்றால், நாங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதும் என் அம்மா அழுவதும் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என அன்றுதான் முடிவெடுத்தேன். திருட்டுத் தொழில் செய்யும் கும்பலோடு இணைந்து வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம், நகை, துணிமணிகள் திருடி அதை வெளிச் சந்தையில் விற்று பணம் சம்பாதித்துள்ளேன். இதற்காக இளம் வயதிலேயே பலமுறை கைதும் செய்யப்பட்டுள்ளேன். பின், என்னுடைய பள்ளி விளையாட்டு ஆசிரியர் மூலம் கால்பந்து எனக்கு அறிமுகமாகியது. அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பல அணிகளுக்காக விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்.ஃஎப்.எல் தொடரில் விளையாடுவதே எனது லட்சியமாக இருந்தது. அதன்மூலம் நிறைய பணம் கிடைக்கும். அதில், என் பெற்றோருக்காக ஒரு வீடு வாங்கிக்கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அச்சமயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக என் கனவு நிறைவேறவில்லை. பின் என் அப்பாவிடம் சென்று நான் ரெஸ்லராக ஆசைப்படுகிறேன் எனக் கூறினேன். அவர் சம்மதிக்கவில்லை. உன் வாழ்க்கையிலேயே தவறான முடிவு ஒன்றை எடுக்கிறாய் என்றார். என் முடிவில் நான் உறுதியாக இருந்ததால், அவர் எனக்குப் பயிற்சியளித்தார்".
தங்குவதற்கு வீடில்லை என்று தன்னுடைய அம்மா கதறியழுத நாளே என் வாழ்வில் முக்கியமான நாள் எனத் தான் ஏறும் அனைத்து மேடைகளிலும் அழுத்தமாகக் கூறுகிறார் ராக். "என்னுடைய கஷ்ட காலங்களை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன், அதுதான் நிகழ்காலத்தில் என்னைச் சுற்றி உள்ளதை உணர்ந்து கொள்ள வழி செய்கிறது. என்னை விட கடினமாக உழைக்க கூடிய ஒருவர் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், என்னிடம் உள்ள வெற்றிப்பசியை விட வேறொருவரிடம் அதிகம் இருக்க முடியாது. வெற்றிக்காகவும், சிறந்த விஷயத்திற்காகவும் வேட்கை கொண்டு காத்திருப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமானது" எனத் தன்னுடைய வெற்றியின் ரகசியத்தையும் பகிர்கிறார் ராக். கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!
முந்தைய பகுதி...
"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா..." -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு! |வென்றோர் சொல் #24