நாடாளுமன்றத்தில் நாஜிக் கட்சிக்கு 107 இடங்கள் சும்மா கிடைத்துவிடவில்லை. அவ்வளவும் பொய்களை விதைத்து கைப்பற்றியவை. மக்கள் மத்தியில் இனவெறியை விதைத்து அறுவடை செய்தவை. இதில் கோயபல்சுக்கு முக்கிய பங்கு உண்டு. இல்லை, அவனுக்குத்தான் முக்கிய பங்கு. ஹிட்லரின் பேச்சுக்களை தயாரித்துக் கொடுத்தவன் அவன்தான். பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்தவன் அவன்தான். இறைத்தூதர் போன்ற இமேஜை உருவாக்கியவன் அவன்தான்.
யூதர்களை தாக்குவதும், கம்யூனிஸ்ட்டுகளை கலவரத்திற்கு தூண்டுவதும், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்கள் மத்தியில் பீதியை கிளப்புவதும் அவனது அன்றாட வேலையாக இருந்தது. அதில் அவன் வெற்றி பெற்றான். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நடத்துவதற்கு காரணமாக இருந்தவனே அவன்தான்.
ஜெர்மனின் தேசிய வங்கி திவாலாகப் போகிறது என்று, தினந்தோறும் எழுதியும் பேசியுமே, நன்றாக இயங்கிய அந்த வங்கியை திவாலாக்கியவன். அமெரிக்காவின் பங்குச் சந்தை வீழ்ச்சியை ஆதாரமாக வைத்து, அவன் புனைந்து வெளியிட்ட கதைகள் பீதியூட்டக் கூடிய வகையில் இருந்தன.
நாட்டின் சரிந்து வரும் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாமல் அரசு திணறியது. குடியரசுத்தலைவராக இருந்த ஹின்டன்பர்க் வேறு வழியின்றி புரூனிங் என்பவரை பிரதமராக்கினார். கத்தோலிக்க ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அவர் பொருளாதார நிபுணர். அவரும் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு நின்றார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.
ஒவ்வொரு கட்சியும் தங்கள் திசையில் பிரதமரை இழுக்க முயன்றால் அவர் எந்தப்பக்கம்தான் போவார்?
வேறு வழியில்லாமல், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தும்படி குடியரசுத்தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
எல்லாம் கோயபல்ஸ் கைங்கர்யம்தான்.
1930 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஹிட்லரின் பிரச்சாரத்தைக் கேட்க மக்கள் கூட்டம் அலைபாய்ந்தது. நீண்ட நேரம் காத்திருந்தார்கள். மேடையில் ஏறியவுடன் விரக்தியுடன் பேச்சைத் தொடங்குவார். கொஞ்சமாக குரலை உயர்த்துவார். திடீரென ஆவேசப்படுவார். ஜெர்மனியைக் காப்பாற்ற தன்னால் மட்டுமே முடியும் என்று இரண்டு கைகளையும் விரித்து வானைப் பார்த்துக் கத்துவார். கூட்டம் பரவசமடையும். கரகோஷம் செவிப்பறையை கிழிக்கும்.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் வாக்குறுதிகள் வைத்திருப்பார். மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், பெண்கள், விவசாயிகள் என்று பாரபட்சமில்லாமல் அனைவருடைய வாழ்க்கையையும் வளப்படுத்த தன்னிடம் திட்டங்கள் இருப்பதாக பட்டியலிடுவார்.
ஜெர்மனியை என் கையில் ஒப்படைத்தால், பாலாறும் தேனாறும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் என்று அடித்துக் கூறுவார்.
அந்த வாக்குறுதிகள் ஓரளவு பலன் கொடுத்தன. முதன் முறையாக ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாஜிக் கட்சி 107 இடங்களைப் பெற்றது. ஹிட்லர் பெருமிதமடைந்தார். தனது எண்ணம் ஈடேறப்போகிறது என்று நம்பத் தொடங்கினார்.
பத்திரிகைகள் தேடி வந்து பேட்டி கண்டன. மக்கள் அவருடன் கைகுலுக்கக் காத்திருந்தனர். எங்கே திரும்பினாலும் புகழ் வெளிச்சம் அவர்மீதே படர்ந்தது.
அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்திற்கு நாஜிகள் வந்தனர். பிரவுன் கலர் சீருடையில் அவர்கள் வந்து ஹிட்லர் வாழ்க என்று ஆஜர்படுத்திக் கொண்டனர்.
முதல் சிறிய வெற்றியே நாஜிக் கட்சியின் அதிரடிப்படை மற்றும் இளைஞர் அணியினரை ஆட்டம்போட வைத்தது. அவர்கள் யூதர்களின் கடைகள், உணவு விடுதிகளை அடித்து நொறுக்கினர். எனவே, அந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிரடிப்படையினரின் சீருடையில் வந்தனர்.
புதிய அரசுக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என்பதை அவர்கள் சூசகமாக தெரிவித்தனர்.
அந்தத் தேர்தலுக்குப் பின் ஜெர்மன் தொழிலதிபர்கள் ஹிட்லர்மீது போட்டி போட்டு பணத்தை வாரிக் கொட்டினர். அடுத்து நாஜிகள்தான் ஜெர்மன் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்று அவர்கள் முடிவே செய்து விட்டார்கள்.
ராணுவத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவும் ஹிட்லருக்கு கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.
ஜெர்மன் ராணுவத்தில் நாஜிக் கொள்கைகளை புகுத்த முயன்றதாக மூன்று இளம் வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர்கள் மீதான விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக ஹிட்லர் ராணுவ நீதிமன்றத்திற்கு வந்தார்.
இப்போதுள்ள ராணுவத்தை அகற்றும் எண்ணமே நாஜிக் கட்சிக்கு இல்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெர்மனின் ராணுவம் நவீனப்படுத்தப்படும். உலகின் எங்குமில்லாத வலிமையுடன் பொலிவு பெறும். வெர்சைல்ஸ் உடன்படிக்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
ஹிட்லரின் வாக்குமூலம் அதிகாரிகளுக்கு நிம்மதி அளித்தது. இதைத்தான் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
அப்போது ஹிட்லருக்கு 39 வயதுதான் ஆகியிருந்தது. தனது போராட்டத்திற்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை மனதில் நிறைந்தவுடன், இன்னும் இளைஞனாக மாறிவிட்டார்.
அதிலும் ஜெலியை பார்க்கும் போதெல்லாம் அவர் டீன் ஏஜ் பையன் மாதிரி ஆகிவிடுகிறார். அவளுடன் ஊர்சுற்றுவதை விரும்பினார். அவளும் சக்தி வாய்ந்த மனிதராக போற்றப்படும் ஹிட்லரின் விருப்பத்துக்கு உரியவளாக இருப்பதை பெருமையாக நினைத்தாள்.
இருவரும் போகும் போது ஹிட்லரிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள். ஆட்டோகிராப் புக்கில் கையெழுத்துக் கேட்பார்கள். எப்போதும் அவரது ஏவலுக்கு காத்திருக்கும் தொண்டர்கள். பணிவான சேவகம் என்று எல்லாமே ஜெலியை கவர்ந்திருந்தன.
ஆனால், தன்னைவிட வயதில் மூத்த ஹிட்லரைக் கவர்ந்தது போலவே, ஏராளமான இளைஞர்களும் ஜெலியை ரசித்தனர். அவளுக்கும் அதுபோன்ற இளைஞர்களுடன் பழக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கு ஹிட்லர் அனுமதிக்க மாட்டார்.
அவளுக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்ட எமில் மௌரிஸ் என்ற இளைஞனுடன் சில நாட்கள் தொடர்பு வைத்திருந்தாள். ஆனால், ஒருநாள் அவன் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
யார் அவனைச் சுட்டது என்பதே அவளுக்குத் தெரியவில்லை.
ஜெலியை யாரும் பார்க்கக் கூடாது என்று பொறாமைப்படும் அளவுக்கு சென்ற ஹிட்லர், தான் மட்டும், தனது அந்தரங்க புகைப்படக்காராகப் பணிபுரிந்த ஹெய்ன்ரிச் ஹாப்மேனின் உதவியாளரான 17 வயது ஈவா பிரவுன் என்ற பெண்மீது மையல் கொண்டிருந்தார்.
1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, ஈவா பிரவுனை சினிமா தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். அத்தனை பார்வையாளர்கள் மத்தியில், தனது நெருக்கமான கட்சித்தலைவர்களின் குடும்பத்தினர் அருகிருக்க, ஈவா பிரவுனுடன் அவர் சினிமா பார்த்தார்.
“இதுபோன்ற அடுத்த சந்திப்புக்காக நான் காத்திருக்கிறேன்” என்று அவள் ஹிட்லருக்கு குறிப்பு அனுப்பியிருந்தாள்.
ஹிட்லரின் இந்தத் திசைமாற்றம் ஜெலிக்கு வெறுப்பூட்டியது. அவரும் தொடுவதில்லை. பிறருடனும் பழக விடுவதில்லை. தன்னை அடிமையைப் போல நடத்துகிறார் என்று கருதினாள்.
ஈவா பிரவுன் எழுதிய கடிதம் ஜெலியின் கைக்குக் கிடைத்தது. கடுமையான ஆத்திரமடைந்தாள். தனது அடிமைத்தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
அடுத்த நாள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது.
“எனக்கு இங்கிருக்க பிடிக்கவில்லை. நான் வியன்னாவுக்கே போய்விடுகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள்.”
“நான் உன் பாதுகாவலன். உனக்கு எது நல்லது என்பது எனக்குத் தெரியும். நீ வியன்னாவுக்கு போகக் கூடாது”.
“அப்படியானால், அடுத்த பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் நீங்கள், எனக்கு ஏதேனும் ஒரு முடிவைச் சொல்லுங்கள்”.
“அதுதான் சொல்லிவிட்டேனே. நீ வியன்னாவுக்கு போகக்கூடாது”.
ஹிட்லர் வேகமாகக் கிளம்பி கீழே வந்து காரில் ஏறினார். மாடியின் ஜன்னல் வழியே ஜெலி எட்டிப் பார்த்தாள்.
“முடிவாய் என்ன சொல்கிறீர்கள்?”
“போகக்கூடாது”
ஹிட்லர் காரில் போய்விட்டார். மியூனிக் நகரிலிருந்து புறப்பட்ட ஹிட்லர், அடுத்தநாள் காலை ஹாம்பர்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இடையில் ஒரு டாக்ஸி அவரது காரை வழி மறித்தது. ஹிட்லரின் நண்பர் ருடால்ப் ஹெஸ் தொலைபேசியில் இருப்பதாக தகவல் சொல்லப்பட்டது.
அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றுக்கு விரைந்த ஹிட்லர் தொலைபேசியை எடுத்தார்.
“ஜெலி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாள்”
ருடால்ப் ஹெஸ் தெரிவித்த தகவல் ஹிட்லரை அதிர்ச்சியடையச் செய்தது. அவருடைய காதல் தோற்றுவிட்டது. முதல்முதலாய் தான் நேசித்த பெண் செத்துவிட்டாள் என்ற செய்தி அவரை பெரிய அளவில் பாதித்தது.
அதன் பிறகு அவர் முன்பு போல இல்லை என்று ஹெர்மன் கோயரிங் கூறுவார்.
அது நிஜம்தான். ஹிட்லர் ஜெலியை மறக்கவே இல்லை. அவளது பிறந்தநாள் மற்றும் இறந்தநாளில் அவளுடைய புகைப்படத்திற்கு மலர் அலங்காரம் செய்து சோகமாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஆனால், ஜெலி இறந்தபோது, அவளை ஹிட்லர்தான் சுட்டுக் கொன்றுவிட்டதாக சில செய்தித்தாள்கள் வதந்தியைப் பரப்பின.
ஜெலி தற்கொலை செய்து கொண்டபோது, அருகில் இருந்த டேபிளில் ஈவா பிரவுன் ஹிட்லருக்கு எழுதிய குறிப்பு சுக்கலாகக் கிழிக்கப்பட்டுக் கிடந்தது மட்டுமே, ஹிட்லர் மீதான குற்றச்சாட்டை பொய்யாக்க உதவியது.
முந்தைய பகுதி:
ஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும்! - ஹிட்லர் சர்வாதிகாரியானது எப்படி? #1