ஃபிஷிங் ( Phishing ) வகைகள்.
ஸ்பியர் ஃபிஷிங்
திமிங்கலம் (whaling phishing)
விஷிங் (vishing)
மின்னஞ்சல் ஃபிஷிங் என நான்கு வகைகள் உள்ளன.
ஸ்பியர் ஃபிஷிங் என்பது குறிப்பிட்ட ஒரு நபரை குறி வைத்து ஏவுவது. மின்னஞ்சல் ஃபிஷிங், விஷிங் என்பதை தினம் தினம் நாம் ஏதாவது ஒரு வகையில் கண்டு வருகிறோம். இதில் இன்னும் முக்கியமானது வாலிங் ஃபிஷிங் (whaling phishing). தமிழில் திமிங்கல வேட்டை. பெரிய மனிதர்களை அல்லது பெரிய நிறுவனங்களை, பெரிய கட்சிகளை, அரசுகளை, அதிகாரங்களை குறி வைத்து ஏவுவது. கடலில் வாழும் திமிங்கலம் பெரிய கப்பல்களை குறி வைத்து கவிழ்க்கும். அதுபோன்று குறி வைத்து இணையத்தில் மோசடி செய்யும் முறை. சரியாக குறி வைக்கப்பட்ட பெரிய வேட்டை. அதற்கு உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கரன்ஸி டிஜிட்டல் திருட்டை சொல்லலாம். கிரிப்டோ கரன்ஸி என்பது டிஜிட்டல் பணம். இப்போது நாம் நாணயமாகவும், நோட்டாகவும் பணம் வைத்திருக்கிறோம். அதுவே டிஜிட்டலாக அதாவது வங்கி கணக்கில் நம் பணம் இருப்பதுபோல் இருக்கும். அதை நாம் பணத்தாளாக வைத்திருக்க முடியாது. வருங்காலத்தில் பணத்தாள்களாகவே இருக்காது. பணம் டிஜிட்டலாக இருக்கும். கூகுள் பே, ஃபோன் பே, பே டி.எம் போன்றவை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதுபோல் டிஜிட்டலாகவே இருக்கும்.
2009ல் சடோஷி நகமோடோ (புனைபெயர்தான்) என்பவர் பிட்காயின் என்ற க்ரிப்டோ கரன்சியை உருவாக்கினார். இந்த பிட்காயினுக்குப் பிறகு பல கிரிப்டோகரென்சிகள் உருவாகிவிட்டன. இந்த டிஜிட்டல் கரன்ஸி பல பெயர்களில் நாடு முழுவதும் உள்ளன. அதாவது, பிட்காயின்கள், ஏப்காயின், பைனான்ஸ்காயின், யூனிஸ்வேப், சொலனா, டாகிகாயின், கார்டானோ, டெர்ரா, அவலாஞ்சி, பிட்காயின், எத்திரியம், டோஜ், ட்ரான், ஷிபா என 2 ஆயிரம் வகை கிரிப்டோ கரன்ஸிகள் உள்ளனவாம். ஒரு பிட்காயின் விலை இன்று (6ம் தேதி) 22,398.40 டாலர். இந்திய மார்க்கெட் மதிப்பு 18,31,259.59. சொலானா மதிப்பு 450 டாலர். உலக நாடுகள் இந்த கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையை ஏற்பதில்லை. டிஜிட்டல் கரன்ஸியை இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. ரிசர்வ் வங்கி ஒரு தேசிய வங்கி வழியாக டெஸ்ட் செய்துகொண்டு இருக்கிறது. இந்தியாவில் வாசிராக்ஸ் என்கிற கிரிப்டோ கரன்ஸி இணையதளம் உள்ளது. உலகில் இதுபோல் பாக்ஸ்புல், ஷிப்பே, காயின் டி.சி.எக்ஸ், காயின்ஸ்விட்ச் போன்று பல நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் நாளிதழ்களில் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்யுங்கள் என விளம்பரம் செய்யப்படுகிறது. உலகில் கிரிப்டோ கரன்ஸி மார்க்கெட்டை கண்காணிக்கும் அமைப்பு காயின்ஜெக்கோ. இந்த அமைப்பு உலகளாவிய அமைப்பாகச் செயல்படுகிறது.
ஜப்பான் நாட்டின் பிரபலமானது லிக்விட் என்கிற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இணையதளத்துக்குள் புகுந்த ஹேக்கர்கள் சுமார் 74 மில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ கரன்ஸியை இரண்டு வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். இது டிஜிட்டல் டிரான்ஸக்சன் என்பதால் கணக்குகளுக்கு மட்டுமே மாற்ற முடியும் என்பதால் எந்தெந்த கணக்குகளுக்கு மாற்றுகிறார்கள் என்பதை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்துடன் பேசி கரன்ஸியை மீட்க முயற்சித்து வருகிறோம் என்கிறது லிக்விட் நிர்வாகம். இதற்கு முன்பு இதேபோல் டெபி என்னும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவன கணக்கிலிருந்து மட்டும் 600 மில்லியன் டாலர் அளவுக்கு சுரண்டியுள்ளனர் ஹேக்கர்கள். இந்தப் பெரிய திருட்டினால் அந்த நிறுவனம் அப்படியே திவாலாகிப் போனது. 2014 ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய பிட்காயின் எக்சேஞ்சான மெட்காக்ஸ் (Mt. Gox) திவாலானதாக அறிவித்தது. காரணம், அதன் வசம் இருந்த 473 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை ஆன்லைன் வழியாக யாரோ அபேஸ் செய்துவிட்டார்கள். இவையனைத்தும் வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமானவை அப்போது இருந்த மொத்த பிட்காயின்களில் 7 சதவீதம் அந்தத் திருட்டில் பறிபோயிருந்தது.
இதனால் அந்த நிறுவனங்களுக்கு எந்த நட்டமும் இல்லை. அதில் முதலீடு செய்த பொதுமக்கள்தான் அம்போவெனப் போனார்கள். கிரிப்டோகரன்ஸி வாங்கவோ, விற்கவோ அரசாங்கத்திடம் இருந்து எந்த அனுமதியும் வாங்கத் தேவையில்லை. ஆன்லைனில்தான் வாங்குவது, விற்பது எல்லாமே. கிரிப்டோகரன்ஸி வாங்க வேண்டும் என்றால் அதனை விற்பனை செய்யும் இணையதளத்துக்கு சென்று ஒரு யூசர்நேம் உருவாக்கிக்கொள்ள வேண்டியதுதான். உங்கள் வங்கி கணக்கு வழியாக அவர்களின் வங்கி கணக்குக்கு பணம் செலுத்தினால் அவர்கள் கிரிப்டோகரன்ஸி தருவார்கள். எத்தனை வாங்குகிறீர்களோ அதற்கான பணத்தை செலுத்த வேண்டும். அது டிஜிட்டல் எண்ணாக இருக்கும். அது விலை உயரும், தேவையில்லை எனும்போது விற்பனை செய்தால் அந்த தொகை மீண்டும் வங்கி கணக்குக்கு வந்துவிடும். இதை யார் விற்கிறார்கள், யார் வாங்குகிறார்கள் என்பது சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தவிர யாருக்கும் தெரியாது. அதனால் டிஜிட்டல் முறையில் திருடு போனாலும் யார் மீதும் புகார் தரவும் முடியாது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஆன்லைன் வழியாக, மொபைல் வழியாக டிஜிட்டல் கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவலின்படி, சைபர் க்ரைம் குற்றங்கள் என வழக்கு பதிவானதாகத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2014 ஆம் ஆண்டு 9,622 வழக்குகளும், 2015ல் 11,592 வழக்குகளும், 2016ல் 12,317 வழக்குளும், 2018ல் 27,248 வழக்குகளும், 2019ல் 44,735 வழக்குகளும், 2020ல் 50,035, 2021ல் 52,974 என்கிற கணக்கில் புகார்கள் பதிவாகியுள்ளன. பதிவாகாத வழக்குகள் என்பது இதைவிட சில மடங்கு அதிகம். காவல்நிலையத்துக்கு புகாரே வராதது பல மடங்கு இருக்கும்.
இப்படி டிஜிட்டல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரிக்க டிஜிட்டல் வசதியில்லாத காலத்திலேயே இந்தியாவின் பிற மாநில போலீஸார், குறிப்பாக வடமாநில போலீஸார் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். ஏன்? எதற்கு?
வேட்டை தொடரும்…
டிஜிட்டல் சதுரங்க வேட்டை: உஷார்; ஒரே க்ளிக்கில் வாழ்க்கையே போய்விடும்