
முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்
ஒரு பெற்றோர் தனது வெளிநாட்டில் வேலை செய்யும் பையனுக்கு மேட்ரிமோனி ஆப் மூலம் வரன் பார்த்துள்ளனர். பெண் வீட்டார், பையன் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருப்பதைத் தெரிந்து கொண்டு உடனே கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். கல்யாணம் முடிந்த பிறகு அந்த பையன் தன் மனைவியை ஒரு முறை தான் வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். பின்பு சில காரணங்களால், மனைவியை விட்டு அவன் மட்டும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வேலை பார்க்கும்படியான சூழல் ஏற்படுகிறது. அதனால் மனைவியை இங்கு விட்டுவிட்டு அவளது பெயரில் இங்கேயே ஒரு நிலம் வாங்கியிருக்கிறான்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவன், தனது மனைவிக்குத் தொடர்ந்து பணம் அனுப்ப, அந்த பெண் இங்கு ஒரு வீட்டைக் கட்டி அதில் தனது அப்பா, அம்மா ஆகியோரை தங்க வைக்கிறாள். ஒரு நாள், வெளிநாட்டிலிருந்து அந்த பையன் மனைவியை பார்க்க வரும்போது, வீட்டில் தனது அப்பா, அம்மா இல்லாமல் மனைவியின் அப்பா, அம்மா இருந்துள்ளனர். இதையெல்லாம் பார்த்த அந்த பையன் என்னிடம் வந்து என் வீட்டில் ஏதோ சந்தேகப்படும் வகையில் சில மாற்றங்கள் நடக்கிறது, கொஞ்சம் விசாரித்து சொல்லுங்கள் என்றான்.
அந்த பையன் மீண்டும் வெளிநாடு சென்றதும் எங்கள் வேலையை தொடங்க ஆரம்பித்தோம்.
தொடர்ந்து, அவன் மனைவியை கண்காணிக்க ஆரம்பித்தோம். ஒரு நபர் குழந்தையுடன், அடிக்கடி அந்த பையனின் மனைவி வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்தான். முதலில் அந்த பெண்ணின் அப்பா, அம்மா வீட்டுக்குள் இருப்பதால், வந்து போகும் பையன் அந்த பெண்ணின் உறவுகளில் ஒருவனாக இருக்கக்கூடும் என்று நினைத்தேன். பின்பு குழந்தையுடன் வந்த நபரும் அந்த பெண்ணும் ஒன்றாக சுத்த ஆரம்பித்தனர். அடுத்தகட்ட விசாரணையாக இரண்டு பேரை அனுப்பி குடும்ப சர்வே எடுப்பதுபோல் விசாரித்தேன். அப்போதுதான் இருவரும் கணவன் மனைவி என்று தெரிந்தது. உடனே இந்த விஷயத்தை வெளிநாட்டில் வேலை பார்க்கும் பையனிடம் கூறி இனிமேல் உன் மனைவிக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறினோம். அங்குள்ள வேலைகளை முடித்து இங்கு வர அவனுக்கு தாமதமாகவிட்டது.
அதன் பிறகு, ஒரு நாள் அதிகாலையில் போலீஸாருடன் சென்று கையும் களவுமாக அந்த பெண்ணையும் அவளது கணவரையும் பிடித்தோம். போலீசாரின் விசாரணையில், ஏற்கனவே இந்த பெண்ணுக்கு முதல் திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. மேலும், குடும்பமாக சேர்ந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அந்த பையனையும் ஏமாற்றியது அம்பலமானது. இதையடுத்து இரண்டாவது திருமணம் செல்லாது என்ற அடிப்படையில் அந்த பெண்ணிடம் இருந்து வீட்டை மட்டும் அந்த பையன் கைப்பற்றினோம்.