Skip to main content

அம்மாவுடன் மகனை தொடர்புப்படுத்திய மனைவி; மருமகளால் கதறி அழுத மாமியார் -  வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 66

Published on 07/08/2024 | Edited on 07/08/2024
advocate santhakumaris valakku en 66

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

தமிழ் தெரியாத அமித் என்பவருடைய வழக்கு இது. ஏற்கெனவே தன் மீது வழக்கு ஒன்று தாம்பரம் நீதிமன்றத்தில் போடப்பட்டிருப்பதாகத் தான் கூறி என்னிடம் வந்தார். கால் உடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அங்கு அவரால் போகமுடியாது என்ற காரணத்தினால், அந்த வழக்கை சென்னைக்குட்பட்ட பகுதியில் மாற்றி தரும்படி கேட்டார். அதன்படி, தாம்பரம் நீதிமன்றத்தில் போடப்பட்டிருந்த வழக்கை சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மாற்றித் தரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். அமித்தின் கண்டிசனை பார்த்த நீதிபதி, அதன்படி மாற்றிக் கொடுத்தார்.

இதனையடுத்து அந்த வழக்கைப் பற்றி விசாரித்தேன். அமித், சுசில் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். திருமணம் முடிந்து அமித் வீட்டுக்கு வந்த சுசிலுக்கு, அமித் குடும்பத்தினர் யாரையும் பிடிக்கவில்லை. அமித்தின் அப்பா பஞ்சாயத்து ஆபிசில் வேலை பார்த்து வந்துள்ளார். அமித்தின் அம்மாவுக்கு சக்கரை நோய், நுரையீரல் பாதிப்பு, பிரஸ்ட் கேன்சர் போன்ற உடல்நிலை பிரச்சனையால் புடவை போன்ற இருக்கமான உடை அணியமுடிவதில்லை. அதனால், அவர் பைஜாமா போன்ற வேறு உடை தான் அணிவார். 

அமித்தின் குடும்பம், பழங்கால பாரம்பரியத்தை கடைபிடிப்பவர்கள். மாமனார் வந்தால், மருமகள் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பதை எதிர்பார்ப்பவர்கள். இது சுசிலுக்கு பிடிக்கவில்லை. அமித்தின் அம்மா அணிந்திருக்கும் உடை மீதும் சுசுலுக்கு பிடிக்கவில்லை. நான் இருக்க வேண்டும் என்றால், உன் அம்மாவை புடவை அணிந்து இருக்க சொல்லுங்கள், இல்லையென்றால் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கூறி சுசில் அமித்திடம் சண்டை போட்டுள்ளார். ஆனால், தனது பெற்றோரை பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று அமித் அதை மறுத்துவிட்டார். இப்படியே, நாளுக்கு நாள் சண்டை நீடிக்கிறது. ஒரு நாள், அமித்தின் அம்மாவின் உடையை பார்த்து, உன் மகனை மயக்க இப்படி உடை அணிகிறாயா என சுசில் கேட்கிறார். இதனால், மனமுடைந்த அந்த அம்மா தேம்பி தேம்பி அழுகிறார். வேலை முடிந்து வீட்டுக்கு அமித்திடம், இனிமேல் என்னால் வீட்டில் இருக்க முடியாது நான் சாக போகிறேன் என அந்த அம்மா கூறி அழுகிறார். இது பற்றி தன் மனைவி கேட்ட போது, உங்க அம்மா என்ன இப்படியெல்லாம் டிரெஸ் போடுறாங்க, நான் போட்ட கலர்ல டிரெஸ் போடுறாங்க என சுசில் சண்டை போடுகிறாள். 

இப்படியே நாட்கள் செல்ல, ஒரு நாள் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று சுசில் கேட்கிறாள். தன்னுடைய பெற்றோரின் உடல்நிலை பிரச்சனை இப்படி இருக்க தன்னால் தனியாக வர முடியாது என்றும், வாடகை பணம் கட்ட முடியாது என்றும்  தன்னால் வரமுடியாது என்று அமித் அதை மறுத்துவிடுகிறார். அமித்தின் அப்பா, மற்றவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக அக்கம்பக்கத்தினரிடம் சுசில் பொய் சொல்ல, அது ஊர் முழுக்க பரவுகிறது. அமித் வீட்டில் இல்லாத நேரத்திலும் மாமியாரைத் தகாத வார்த்தையால் பேசுகிறாள். மேலும், தன் அம்மாவுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து சம்பளம் வாங்கிய கையோடு அதை வாங்கி கொடுப்பதால், இனிமேல் வருமானத்தை தன்னிடம் கொடுக்குமாறு சுசில் அமித்திடம் கேட்கிறாள். மனைவியிடம் பணத்தை கொடுத்துவிட்டால் தன் அம்மாவுக்கு மருந்து, சாப்பாடு ஒழுங்காக கிடைக்காது என நினைத்து முடியாது என்கிறான். கோபத்தில் சுசிலும் தன் வீட்டுக்கு போய்விட, தன் பெற்றோர் மூலம் வழக்கு தொடுக்கிறாள். 

நான் அமித்திடம், உன்னுடைய மனைவி என்ன பேசினாள் என்பதை உன்னுடைய பெற்றோரை கம்ப்ளைண்ட் கொடுக்க சொல் என்றேன். அதன்படி அவர்களும், தன்னுடைய மருமகள் தன்னை பற்றி என்ன வார்த்தைகள் கூறினார் என்பதையும் என்ன நடந்தது என்பதையும் விவரித்து கம்ப்ளைண்ட் கொடுத்தார்கள். போலீஸும் சுசிலை அழைத்து பேசினார்கள். ஆனால், தனது அம்மாவை தகாத வார்த்தையால் சொன்ன பிறகு மனைவியோடு தன்னால் வாழ முடியாது என அமித் கூறிவிட்டான். நான் அவளுக்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பினாலும், அந்த அட்ரஸில் ஆட்கள் யாரும் இல்லை என வருகிறது. அமித்திடம் அந்த பெண்ணின் அட்ரஸிற்கு சென்று அவளை பற்றி விசாரியுங்கள் என நான் அனுப்பி வைக்க, அவரும் அந்த இடத்தில் 15 நாட்கள் வரை இருந்திருக்கிறார். மனைவி இந்த இடத்தில் தான் இருப்பதாக ஒரு அட்ரஸை என்னிடம் கொடுத்தார். மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும் எந்தவித தகவலும் கிடைக்காததால், அந்த அந்த அட்ரஸிற்கு சென்று நோட்டீஸ் செர்வ் ஆகிவிட்டதா பாருங்கள் என அவரை அனுப்பி வைத்தேன். ஆனால், அமித் ஒரு போஸ்ட் மேனை பிடித்து அந்த அட்ரஸில் நோட்டீஸ் செர்வ் ஆகிவிட்டதாக அடுத்த வாய்தாவில் அக்னாலஜ்மெண்டை கொண்டு வந்தார். ஆனால், சுசில் வேறு ஒரு அட்ரஸில் இருந்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞரை பிடித்து அங்கு வழக்கு ஒன்றை போட்டு ஸ்டே வாங்குகிறாள். பொய்யான ரெக்கார்ட்டை வைத்து அமித் இப்படி செய்து விட்டார். இதனை நான் ஏற்கவேமாட்டேன் எனக் கூறி சென்னை நீதிமன்றத்திலிருந்து ஒரு லெட்டரை வாங்கி உச்சநீதிமன்றத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு செல்லுங்கள் எனச் சொன்னேன். அதன்படி, அவரும் அங்கு சென்று மீடியேசன் வரை செல்கிறது. அவள், தனக்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் வேண்டுமென்கிறாள். திருமணத்திற்கு நகை போட்டிருப்பதாகவும் அதனை கழித்து தான் கொடுப்பேன் என அமித்தும் கூற பேச்சுவார்த்தைக்கு பிறகு 3 லட்சம் கொடுப்பதாக சம்மதித்தார். அதன் பிறகு, உச்சநீதிமன்ற நீதிபதிகளே இவர்களுக்கு டைவர்ஸ் கொடுக்க இவர்கள் இருவருக்கும் மியுட்ச்சுவல் கன்செண்டில் விவகாரத்து ஆனது.