குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
அழகேசன் என்பவரின் வழக்கு இது. அவர் இராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிகிறவரார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவருக்கு பெற்றோர் நிச்சயித்து திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் ஆனதும் பெண்ணை இராணுவத்தில் தான் பணிபுரிகிற இடத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார். இல்லற வாழ்க்கை சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு சான்றாக ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது.
குழந்தை பிறந்த பிறகு கொஞ்ச நாட்களுக்கு அம்மா வீட்டில் சென்று அந்த பெண் தங்கி இருக்கிறார். பிறகு அழகேசன் சென்று தன்னுடைய இடத்திற்கே கூட்டி வந்து விடுகிறார். இராணுவ குடியிருப்பு பகுதியில் குளிர் அதிகமாக வரும் சீசனில் குழந்தையை வைத்துக் கொள்ள அந்த பெண் கஷ்டப்படுகிறாள். தன்னுடைய பெற்றோரை வரவழைத்து மீண்டும் ஊருக்கு வந்துவிடுகிறாள்.
குளிர் சீசன் முடிந்ததும் இராணுவத்திலிருந்து வந்து தன்னோடு வருமாறு அழைத்தால் அந்த பெண்ணோ வர மறுக்கிறாள். ஒரு சில சமயம் அவமரியாதையாகவும் அவரை நடத்துகிறாள். தொடர்ச்சியாக அந்த பெண்ணை அவளது வீட்டிற்கு சென்று அழைக்கிறார், ஆனால் வர மறுத்து அழகேசன் தருகிற பணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறாள். அதே சமயத்தில் தன்னுடைய கணவர் தனக்கு பராமரிப்பு தொகை தரவில்லை என்றும் இராணுவத்திற்கு பொய்யாக ஒரு புகார் கடிதம் அனுப்புகிறாள்.
அந்த புகாரோடு விடாமல் என் கணவரின் தந்தையும் இராணுவத்தில் இருந்திருக்கிறார், அவருக்காக கொடுக்கப்பட்ட இடத்தையும் யாரும் பயன்படுத்தக் கூடாது அதற்கு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தையும் இராணுவத்திற்கு அனுப்பி வைக்கிறாள். இதை விசாரித்த இராணுவ உயர் அதிகாரிகள் உன் மனைவிக்கு என்ன தான் பிரச்சனையோ அதை சரி செய்து விட்டு வா என்று அனுப்பி வைக்கிறார்கள்.
சேர்ந்து வாழலாம் வா என்றால் வர மாட்டேங்கிறாள். ஆனால் பராமரிப்பு தொகை மட்டும் வேண்டும் என்கிறாள், என்ன செய்யலாம் என்று சட்ட உதவியை நாடினார் அழகேசன். இது குடும்ப நல வழக்காகும், இராணுவத்தில் பணிபுரிகிறவர் அடிக்கடி குடும்ப நல நீதிமன்றத்திற்கு வர வாய்ப்பில்லை என்பதை நீதிமன்றத்தில் சொன்னோம். அத்தோடு சேர்ந்து வாழ்த்தான் அழகேசன் கேட்கிறார், அதனால் பெண் வீட்டிலிருக்கும் அழகேசனின் மனைவியை அவருடன் அனுப்பி வையுங்கள் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தோம். அந்த பெண்ணும் சம்மதித்தாள்.
ஆனால் இராணுவ குடியிருப்புக்கு போகவில்லை, தமிழ்நாட்டில் உள்ள அழகேசனின் அம்மாவோடு கொஞ்ச நாளைக்கு இருந்தாள், அழகேசனின் அம்மா உடல்நிலை சரியில்லாத சமயம், அவரை ஒழுங்காக அழகேசனின் மனைவி பார்த்துக் கொள்ளாமல் அடிக்கடி அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறாள். ஒரு சமயத்தில் அழகேசனின் அம்மா இறந்து விடுகிறார்.
அதற்கு மேல் பொறுத்துப் போக முடியாத அழகேசன், டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணினார், அந்த பெண் கேட்ட பெரிய தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க முடியவில்லை. இவரால் முடிந்த தொகையையும், குழந்தைக்கு பேங்கில் டெபாசிட் தொகையும் போட்டு வைத்து டைவர்ஸ் கொடுக்கப்பட்டது, இருவரும் பிரிந்தார்கள். செல்லமாக ஒரே பெண்ணை பெற்றதால் மருமகனோடு அனுப்பி வாழ வைக்காமல் அவளது வாழ்க்கையை கெடுத்ததாக உறவுகள் பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு அதெல்லாம் புரிந்தது மாதிரி தெரியவேயில்லை. இப்பொழுது அழகேசன் இராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தான் இருக்கிறார்.