குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி பார்ப்போம்.
லயா என்ற பெண்ணுடைய வழக்கு இது. தனது அப்பாவுடன் என்னுடைய அலுவலகத்திற்கு வந்த லயா, தன் கணவர் கொடுத்த நோட்டீஸை என்னிடம் கொடுத்தாள். அந்த நோட்டீஸில் லயாவின் கணவர், லயா மீது மிகவும் அன்பு வைத்திருந்தேன் சில நாட்கள் சென்ற பிறகு மனைவியின் உடலில் வெள்ளை திட்டுகள் இருப்பது தெரிய வந்தது. வைட்டமின் குறைபாட்டால் அது ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதால் மருத்துவமனை சென்று சரி கொள்ளலாம் என்று மனைவியை ஆறுதல் படுத்தினேன். அந்த வெள்ளைத்திட்டுகள் அதிகரித்த பிறகு மனையுடன் மருத்துவரை சந்தித்தபோது, லயா 7 வருடம் தனக்கு இந்த வெள்ளைத் திட்டுகள் இருந்ததாக கூறினாள். அதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகு லயாவுக்கு இருக்கும் நோயைப் பற்றி டாக்டர்கள் சொன்ன பிறகு லயா தன்னுடன் பேசாமல் இருந்தாள். அந்த நேரத்தில் அவள் கர்ப்பமாக இருந்தாள். லயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அதன் பின்பு தனது அம்மா வீட்டிற்குச் சென்ற லயா குழந்தை பெற்றதற்கு பிறகு அங்கேயே இருந்துவிட்டாள். குழந்தை பிறந்ததே தாமதமாகத்தான் தெரிந்தது. லயா தனது அம்மா வீட்டிற்குச் சென்று 2 வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் தனிமையில் தவிக்கவிட்டதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று அந்த நோட்டீஸில் லயாவின் கணவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்பு என்ன நடந்தது என்று லயாவிடம் விசாரித்தேன். திருமணமான சமயத்தில் லயாவின் தந்தை, தனது மருமகன் கேட்டதனால் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும் அதை லயா பேரிலும் அவளது கணவர் பேரிலும் பதிவு செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது சீர் வரிசையாக நிறையப் பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும் மருமகனுக்கு கொடுக்கும் அனைத்திலும் தனது மகளுக்கு சம அளவு உரிமை இருக்குமாறு எல்லாவற்றையும் செய்து கொடுத்திருக்கிறார். தன் மாமனார் தன் மனைவிக்கு கொடுத்து வரும் சொத்துகளைப் பார்த்த லயாவின் கணவர். மாமனார் வாங்கி கொடுத்த வீட்டை தன் பேரில் எழுதி வைக்கக் கோரி லயாவிடம் அவளது கணவர் சொல்லியிருக்கிறார். அதற்கு லயா தன் அப்பாவைக் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது என்று பதிலளித்திருக்கிறாள். இதனால் டென்சனான லயாவின் கணவர் சில நாட்களாக கோபத்துடன் மனைவியிடம் நடந்திருக்கிறார். மேலும் தன் மாமனாரை தரைகுறைவாக லயாவின் கணவர் பேசியிருக்கிறார். இதனால் கோபமடைந்த லயா தன் அம்மா வீட்டில் இருந்ததோடு நடந்த சண்டைகளை வீட்டில் சொல்லாமல் அங்கேயே இருந்துள்ளார் என்ற உண்மைகள் தெரிந்தது.
அதன் பின்பு நான் லயாவின் அப்பா கொடுத்த சொத்துகளை அனுமதி இன்றி விற்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் லயாவின் கணவர் சொத்துக்களை விற்கத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்பு லயா தனக்கு மெயிண்டனன்ஸ் வேண்டுமென்று கேட்டாள், அதனால் லயாவுக்கும் அவளது மகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க சொல்லி வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு நடந்தபோது, லயாவின் கணவர் தான் குறைந்த அளவில் சம்பாதிப்பதாகவும் மெயிண்டனன்ஸ் பணம் கொடுக்கும் அளவிற்கு சம்பாத்தியம் இல்லை என்றார். ஆனால் சட்டத்தில் மனைவி மற்றும் குழந்தைக்கு கண்டிப்பான முறையில் மெயிண்டனன்ஸ் பணம் கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது. இதனால் நீதிபதி சம்பாதித்து கண்டிப்பாக மெயிண்டனன்ஸ் பணம் கொடுக்க என்று கூறிவிட்டார். அதன் பிறகு லையாவின் கணவர் மெயிண்டனன்ஸ் பணம் கொடுக்க முடியாமல் திணறினார். அப்படியிருந்தும் லயாவோடு அவர் சேர்ந்து வாழ மனமில்லாமல் இருந்தார். கடைசியாக லையா, தன் கணவர் சொத்துகளை முழுமையாக குழந்தை பேரில் மாற்றினால் மெயிண்டனன்ஸ் பணம் கொடுக்க வேண்டாம். அந்த வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதித்து கொள்வதாக முடிவெடுத்தாள். அதன் பின்பு அதற்கு ஒப்புக்கொண்ட லயாவின் கணவர் சொத்தை எழுதிகொடுத்ததோடு இருவருக்கும் விவாகரத்தாகி வழக்கு முடிவுக்கு வந்தது.