Skip to main content

ஹிஜாப் விதிமுறையால் அதிருப்தி - போட்டியில் இருந்து விலகிய செஸ் வீராங்கனை

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

விளையாடும்போது ஹிஜாப் அணியவேண்டும் என்ற கட்டாயத்தால், இந்தியாவைச் சேர்ந்த செஸ் வீராங்கனை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 
 

soumya

 

 

 

ஈரான் நாட்டில் வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து கிராண்ட் மாஸ்டர் சவுமியா சுவாமிநாதன் கலந்துகொள்வார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தான் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்றும், இது தனது தனிப்பட்ட முடிவு எனவும் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 
 

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் சவுமியா சுவாமிநாதன் வெளியிட்டுள்ள பதிவில், ‘பர்தா அல்லது ஹிஜாப் என்ற எதையும் கட்டாயப்படுத்தி என்னை அணிய வைக்கச் சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வது அவர்களது சட்டவிதியாக இருந்தாலும் அடிப்படை மனித உரிமைகள், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சுதந்திரம், எண்ணங்களை வெளிக்கொணரும் சுதந்திரம், மனசாட்சி மற்றும் மத நம்பிக்கை ஆகியவற்றில் தலையிடுவதாக இருக்கிறது. எனவே, எனது தனிப்பட்ட எண்ணம் மற்றும் உரிமையைக் காக்க எனக்கு இதுதான் கடைசி வழி’ என தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்கள் ஹிஜாப் அணிவது அங்குள்ள விதிகளின்படி கட்டாயமானதாகும். 
 

 

 

இது முதல் முறையல்ல. 2016ஆம் ஆண்டு இந்தியாவின் துப்பாக்கிச்சூடு வீராங்கனை ஹீனா சிந்து, அமெரிக்காவின் செஸ் வீராங்கனை நாஜி பைகிட்ஜே உள்ளிட்டோரும் ஈரானின் இந்த விதிகளை எதிர்த்து, போட்டிகளில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.