இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடக்கவுள்ள நிலையில், இந்த சுற்றுப்பயணம் ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஆஸி. அணிக்கு இந்த தொடர் அவ்வளவு சுவாரசியமானதாக இல்லை. ஏற்கெனவே நடந்துமுடிந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்து, உலக தரவரிசையிலும் சறுக்கலைச் சந்தித்தது.
இந்நிலையில், நேற்று நாட்டிங்கம்மில் வைத்து நடைபெற்ற ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இணை அபாரமாக ஆடி 159 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ரன்கள் குவித்தார். ஜானி பேர்ஸ்டோவ் 139 ரன்கள் விளாச அந்த அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்திருந்தது. இது உலகசாதனை ஆகும்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே சொதப்பலாக ஆடியது. அந்த அணியில் ட்ராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான மோயின் அலி மற்றும் அடில் ரஷீத் சிறப்பாக பந்துவீசினர். அவர்கள் முறையே மூன்று மற்றும் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆஸி. அணி 37 ஓவர்கள் முடிவில் 239 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தத் தோல்வி உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் போட்டி நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.