உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னரே நியூசிலாந்து அணி தகுதி பெற்றிருந்த நிலையில், இந்தியா சமீபத்தில் இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த இறுதிப்போட்டி, இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வேறு மைதானத்துக்கு மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இந்தநிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எங்கு நடைபெறவுள்ளது என்பதை ஐ.சி.சி. தற்போது அறிவித்துள்ளது. ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டி, சவுத்தாம்ப்டனில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி. கூறியுள்ளது.
கரோனாவிற்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளில் பெரும்பாலானவை சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கு நடைபெறுவது கரோனா பரவும் வாய்ப்பை குறைக்கும் எனவும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. மேலும், ஜூன் 23 ரிசர்வ் டே-வாகும்.