ஆஸ்திரேலிய அணியை சேர்ந்தவரும், சென்னை அணி வீரருமான வாட்சன் 2018-ல் நடந்த ஒரு சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் முதலில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த வாட்சன் தற்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். 19-ம் தேதி தொடங்க இருக்கிற 13-வது ஐபிஎல் தொடருக்காக தற்போது அமீரகத்தில் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் 2018-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அனுபவம் சிறப்பாக இருந்தது. ஆனால் சென்னை அணிக்காக விளையாடிய அனுபவம் வித்தியாசமாக அமைந்தது. சென்னை அணியை தோனியும், ஸ்டீபன் பிளம்மிங்கும் அற்புதமாக வழி நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு அணிக்காக விளையாடியதற்காக நான் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதைப்போல உணர்கிறேன். சென்னை அணி உடனான மறக்க முடியாத தருணம் என்றால் அது என்னுடைய முதல் போட்டி தான். மும்பை அணிக்கு எதிரான அந்தப் போட்டியை என்னால் எளிதில் மறந்து விட முடியாது. சென்னை அணி 84 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வெற்றி இலக்கு 166 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிராவோ அதிரடியாக விளையாடி அந்த போட்டியை சிறப்பாக முடித்து வைத்தார். அப்போது தோனி என்னிடம் வந்து "இதுதான் சென்னை அணி... நாம் செய்ய வேண்டியதும் இதுதான்... வெற்றி நம் கையை விட்டுப் போய்விட்டது என்ற நிலைமை நமக்கு எப்போதும் இல்லை என்றார். அது சிறப்பான தருணமாக அமைந்தது" எனக் கூறினார்.