ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளன. போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கப்படும் சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி ஐபிஎல்லுக்கான ஹைப் ஏற்றுகின்றன. அதே வேளையில் ஏலத்தின் போது எடுக்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதும் மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படுவதுமான நிகழ்வுகளும் தொடர்கின்றன.
சென்னை அணியைப் பொறுத்தவரை கேப்டன் தோனிக்கு இது கடைசி ஐபிஎல்லாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதேசமயத்தில் அவர் இன்னும் 2 முதல் 3 சீசன்கள் விளையாடலாம் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தோனி தனது இடது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தினால் இன்னும் சிரமப்படுகிறார் என்றும் அணியில் விக்கெட் கீப்பர்கள் குறைவாக உள்ளதால் காயத்தை மேலும் பெரிதாக்க விரும்பாததால் ஒரு போட்டியில் மட்டும் ஓய்வில் இருக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று (மார்ச் 30) சிஎஸ்கே அணியின் பயிற்சியில் தோனி இருந்த போதும் தோனி பேட் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. காயங்கள் இருந்தாலும் போட்டி நாளின் போதே இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
சென்னை அணிக்கு இன்னும் துணை கேப்டன் அறிவிக்கப்படாததால் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சென்னையில் புதிதாக இணைந்துள்ள பென் ஸ்டோக்ஸ் என மூவரில் ஒருவர் கேப்டனாக செயல்படலாம் எனக் கூறப்படுகிறது. அதே வேளை விக்கெட் கீப்பிங் பணியை டெவான் கான்வே மேற்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக நாளைய போட்டியில் தோனி விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அடுத்து சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே - லக்னோ இடையிலான போட்டியில் தோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியாக இருந்தாலும் தோனி இல்லாதது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அஹமதாபாத் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.