19 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் யாஷ் துள் தலைமையிலான இந்திய அணி, கோப்பையை கைப்பற்றியது. அதனைதொடந்து நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், உலகக்கோப்பையில் ஜொலித்த வீரர்களை ஐபிஎல் அணிகள் போட்டிப்போட்டு ஏலத்தில் எடுத்தனர்.
அந்தவகையில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 1.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிரா விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா, ராஜ்வர்தன் ஹங்கர்கேர் வயதை குறைத்துக்காட்டி மோசடியில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதாரங்களுடன் கடிதம் எழுதியுள்ளதாக சாமனா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜ்வர்தன் ஹங்கர்கேரின் உண்மையான வயது 21 எனவும், 8 ஆம் வகுப்பில் சேர்க்கப்படும்போது அவரது பிறந்த தேதி ஜனவரி 10, 2001ல் இருந்து நவம்பர் 10, 2002க்கு மாற்றப்பட்டது என ஓம்பிரகாஷ் பகோரியா குற்றஞ்சாட்டியுள்ளதாக சாமனா நாளிதழ் கூறியுள்ளது. ஒருவேளை ராஜ்வர்தன் ஹங்கர்கேரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு கிரிக்கெட் விளையாட தற்காலிக தடை விதிக்கப்படலாம். ஏற்கனவே வயதை குறைத்துக் காட்டியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2019 ஆம் ஆண்டு விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ராசிக் சலாம் என்பவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 2 ஆண்டுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.