கடந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின், ராஜஸ்தான் அணிவீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அஷ்வினின் இந்தச் செயலானது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கிரிக்கெட் விதிப்படி அஷ்வினின் செயல் சரியானதுதான் என்று அவருக்கு ஆதரவாக அந்நேரத்தில் சிலர் கருத்தும் தெரிவித்தனர். அதன் பின்பு நடந்த ஏலத்தில் அஷ்வின் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்னால் டெல்லி அணியின் பயிற்சியாளரான ரிக்கிபாண்டிங், இனி மன்கட் முறையில் யாரையும் அவுட் செய்ய வேண்டாம் என அஷ்வினிடம் கூறியுள்ளேன் என்றார்.
இது குறித்து தற்போது பேசியுள்ள அஷ்வின், ரிக்கிபாண்டிங்கிடம் தொலைபேசியில் இது குறித்து பேசினேன். அவர் இன்னும் துபாய் வரவில்லை. அவர் இங்கு வந்ததும் நாங்கள் அனைவரும் அவருடன் அமர்ந்து பேசுவோம். அவரும் என்னுடன் பேச வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அவருடன் தொலைபேசியில் பேசியதே சுவாரசியமாக இருந்தது. அடுத்த வாரம் அவருடன் நேரில் பேசிவிட்டு உங்களுக்கு முழுமையாகத் தெரிவிக்கிறேன். ஏனென்றால் சில நேரங்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசும் போது அது தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படும். அவர்கள் விளையாட்டாகச் சொல்லும் விஷயங்கள் கூட சில நேரங்களில் செய்தியாகிவிடும்" என்றார்.
அடுத்த மாதம் 19- ஆம் தேதி தொடங்க இருக்கிற ஐ.பி.எல் தொடருக்காக அனைத்து அணிவீரர்களும் தற்போது அமீரகத்தில் முகாமிட்டுள்ளனர். அங்கு தனிமைப்படுத்தலுக்கான காலம் நிறைவடைந்தவுடன், தங்கள் பயிற்சியைத் தொடங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.