கடந்த ஆண்டு கிரிக்கெட்டில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தவர் சூர்யகுமார் யாதவ். முன்னணி வீரர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் மைதானத்தில் நுழையும்போது ரசிகர்கள் கத்தும் சத்தம் முன்னணி வீரர்களுக்கு இணையாக இருந்தது. களமிறங்கிய சில போட்டிகளில் விளையாடி டி20 பேட்ஸ்மேன்களில் நம்பர் 1 ஆக உயர்ந்தார்.
மிகச் சிறப்பாக ஆடியவர் தற்போது சொதப்பி வரும் காரணம் மும்பை அணியை மட்டுமல்லாது ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. கடந்த 26 நாட்களில் 4 முறை ரன்கள் ஏதும் எடுக்காமல் சூர்யகுமார் யாதவ் வெளியேறியுள்ளார். நான்கு முறையும் இடது கை பந்துவீச்சாளர்களால் அவுட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் களமிறங்கிய முதல் பந்தில் இருந்தே பந்தை அடித்து ஆடத் துடிப்பதும் அவர் தனது விக்கெட்டை இழக்க முக்கியக் காரணமாக அமைந்ததுள்ளது.
ஓராண்டில் 1000 ரன்களை அடித்த முதல் இந்திய வீரர், உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனைகளைப் படைத்த சூர்யகுமார் யாதவ், தற்போது தனது முதல் ரன்னை எடுப்பதற்குள் தனது விக்கெட்டை பறிகொடுப்பது முரண். பேட்டிங்கில் கலக்கிய அதேவேளையில் ஃபீல்டிங்கிலும் அசத்தி வந்தார் சூர்யகுமார் யாதவ். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இரண்டு கேட்சுகளை விட்ட நிலையில் ஒரு பந்து அவரது கண்ணையும் பதம் பார்த்தது.
இந்தாண்டு இறுதியில் உலகக் கோப்பை நடைபெற இருக்கும் நிலையில் தற்போது வரை டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யகுமார் உலகக் கோப்பைக்கான ஒருநாள் இந்திய அணியில் இடம்பெற வேண்டுமானால் மீண்டும் பழைய ஆட்டத்திற்கு மாறியாக வேண்டும். எஞ்சியுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இடம் பிடிப்பது நிச்சயம்.