டி.என்.பி.எல் ஏழாவது சீசன் ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) ஐபிஎல் போட்டிகளைப் போலவே நடத்தப்படுகிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி நெல்லை கிங்ஸ், சேப்பாக் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் போன்ற அணிகள் விளையாடுகின்றன.
இந்தத் தொடர் 25 நாட்கள் நடைபெறும் எனவும் 32 ஆட்டங்கள் விளையாடப்பட இருக்கின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், கோவை, நெல்லை என மூன்று இடங்களில் மட்டுமே ஆட்டம் நடைபெற இருக்கிறது என்றும் கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் சென்னை, திண்டுக்கல் போன்ற இடங்களில் போட்டிகள் நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 12 முதல் 30 ஆம் தேதி கோவையிலும், ஜூலை 1 முதல் 5 ஆம் தேதி நெல்லையிலும் லீக் ஆட்டங்கள் நடக்கும். முதல் தகுதிச் சுற்று சேலத்தில் ஜூலை 7, 8 தேதிகளில் நடைபெறும் என்றும் நெல்லையில் ஜூலை 10 ஆம் தேதி 2வது தகுதிச் சுற்று ஆட்டமும், 12 ஆம் தேதி இறுதி ஆட்டமும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.