அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன.
சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வான அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடிவிட்ட நிலையில் இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டிர்லிங் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் கேப்டன் பால்பிரின் மற்றும் விக்கெட் கீப்பர் டக்கர் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களைச் சேர்த்தது. 19.2 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய லிவிங்ஸ்டன் மற்றும் மார்க் வுட் தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர்.
158 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி தந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்கள் சரிய மறுபுறம் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார் மாலன். 35 ரன்களில் மாலன் அவுட்டாக மறுபுறம் மொயின் அலி அதிரடியாக ரன்களை சேர்த்தார். 14.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 105 ரன்களை எடுத்து இருந்தது.
இடையே மழை குறுக்கிட அயர்லாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகனாக 47 பந்துகளில் 62 ரன்களை சேர்த்த அயர்லாந்து கேப்டன் பால்பிரின் தேர்வு செய்யப்பட்டார்.
“வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை” - பிசிசிஐ புகார்