Skip to main content

ஒரு பந்து வீச இத்தனை லட்சங்களா? ஐபிஎல்லை அதிர வைத்த ஆஸ்திரேலிய வீரர்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
n

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல்-ன் மினி ஏலமானது கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. மினி ஏலம் என்பதால் பெரிய அளவில் விறுவிறுப்பு இருக்காது என்று கணிக்கப்பட்டது. ஆனால் கணிப்புக்கு மாறாக மிக ஏலத்தையும் விட சிறப்பானதொரு ஏலமாக அமைந்தது.

ஒவ்வொரு அணியும் தனக்குத் தேவையான குறிப்பிட்ட வீரர்களை கணித்து அந்த வீரர்களை வாங்கியே ஆக வேண்டும் என்று முன் தயாரிப்புடன் இந்த ஏலத்தில் களம் இறங்கினர். அதற்கு ஏற்றார்போல் சில அணிகளுக்கு அவர்கள் தேடிய வீரர்கள் கிடைத்தனர். சில அணிகள் தங்களின் தவறான கணக்கால் உரிய வீரர்கள் கிடைக்கும் வாய்ப்பையும் இழந்தனர்.

இதில் முக்கியமாக சென்னை அணி உலக கோப்பையில் இந்திய ஸ்பின்னர்களிடம் கலக்கிய மிட்செலை குறி வைக்கும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் மிட்செலை வாங்கலாம் என்கின்ற நிலையில், கடைசி நேரத்தில் சிஎஸ்கே ஏலத்தில் குதித்து மிட்செலை 14 கோடிக்கு வாங்கியது. மினி ஏலத்தில் 14 கோடியா என்று அனைவரும் வியப்படைந்த நிலையில், உலகக் கோப்பையை வென்ற வெற்றிகரமான கேப்டனான கம்மின்ஸ் அதைவிட அதிக விலைக்கு ஏலம் போனார். கம்மின்ஸ் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

மினி ஏலத்தில் 20 கோடியையே தொட்டுவிட்டதா என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வியப்படைந்த வேளையிலும் கம்மின்ஸிக்கு 20 கோடி என்பது மிக அதிகம் என்கிற விமர்சனமும் எழுந்தது. 20 கோடியே அதிகம் என்று விமர்சகர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டு வந்த நிலையில், அதைவிட வியப்பில் மற்றும் அதிர்ச்சியில் நம்மை ஆழ்த்தினார் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க்.

ஸ்டார்க்கும் 20 கோடிகளுக்கு மேல் ஏலம் கேட்கப்பட்டார். குஜராத் அணியும் கொல்கத்தா அணியும் ஸ்டார்க்கை வாங்குவதில் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டினர். 21 கோடியில் முடிந்து விடுவார் என எதிர்பார்த்த நிலையில் அதையும் தாண்டி 22, 23 என்று சென்ற அவர் 25 கோடியையும் தொட்டு விடுவாரோ என்று எதிர்பார்த்த நிலையில் 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி அவரை தன் வசப்படுத்தியது. இருப்பினும் ஸ்டார்க் ஒரு பவுலர், ஆல்ரவுண்டர் கூட கிடையாது. அவருக்கு இவ்வளவு கோடிகள் தேவையா? மேலும் அவர் எளிதில் காயம் அடையக்கூடிய வீரர் என்றும், தேசத்திற்கான போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐபிஎல் இல் இருந்து பாதியிலேயே கிளம்பி விடுவார் என்றும் அவர் மீதான விமர்சனங்கள் வைக்கப்படுவது உண்டு. அப்படி இருக்கையில் அவருக்கு இவ்வளவு கோடிகள் கொடுத்து வாங்குவது தேவையில்லாதது என்று கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர்

இந்நிலையில், ஸ்டார்க் இந்த ஐபிஎல் இன் 14 போட்டிகளில் பங்கு பெற்றால் மொத்தமாக அவர் 336 பந்துகள் வீச வாய்ப்பு உள்ளது. இது லீக் போட்டிகளை கொண்டு மட்டும் கணக்கிடப்பட்டுள்ளது. லீக் போட்டிகளில் 14 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்திற்கு நான்கு ஓவர்கள் வீதம் 14 போட்டிகளிலும் மொத்தம் 336 பந்துகள் வீச வாய்ப்பு உள்ளது. அப்படி அவர் வீசும் போது அவர் ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகையான 24.75 கோடியை கணக்கீடு செய்தால், ஒரு பந்திற்கு 7.36 லட்சம் பெறுகிறார். ஒரு போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டாலும் ஒரு பங்கிற்கு 7.5 லட்சத்திற்கும் மேல் அவர் சம்பளம் பெறுகிறார். இதை கணக்கீடு செய்து சமூக வலைத்தளங்களில் மிகவும் மதிப்பிற்குரிய வீரர் ஸ்டார்க் என்றும் உலக கோப்பையை வென்றதால்தான் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க்கிற்கு இவ்வளவு மதிப்பு என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- வெ.அருண்குமார்