Skip to main content

புதிய கேப்டனை அறிவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

kkr

 

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல்வேறு வீரர்கள் அணி மாறினர். இந்தநிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்துள்ளது.

 

ஷ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னரே ஷ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி ஏலம் எடுக்கும் என தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வந்த இயான் மோர்கனை இந்தமுறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

பொறுப்புடன் ஆடிய கோலி; சிலிர்த்தது சின்னசாமி மைதானம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
rcb vs kkr ipl live score update kohli played important knock

ஐபிஎல் 2024 இல் 10 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூர் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் கேப்டன்  டூப்ளசிஸ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு கேமரூன் கிரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த மேக்ஸ் வெல்லும் கோலியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை எடுத்து நரேன் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ராஜத் பட்டிதார் மீண்டும் ஏமாற்றினார். 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அனுஜ் ராவத்தும் 3 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஒருபுறம் வீரர்கள் தவறான ஷாட்டுகளால் ஆட்டம் இழந்த போதிலும் மறுபுறம் விராட் கோலி எப்போதும் போல தனக்குரிய பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் எப்போதும் போல தன்னுடைய பினிஷிங் அதிரடியை காட்டினார். 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி 3.5 ஓவர்களிலேயே 52 ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகிறது.  சால்ட் 12 பந்துகளில் 24 ரன்களும், நரைன் 11 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் 83 ரன்கள் எடுத்ததன் மூலம், விராத் கோலி இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த எடுத்துள்ள வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றுக் கொண்டார். 

Next Story

கிளாசனின் அதிரடி வீண்; இந்திய இளம் வேகத்தின் அசத்தலால் கொல்கத்தா த்ரில் வெற்றி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 win for Kolkata as they beat Hyderabad ipl

ஐபிஎல் 2024 இன் மூன்றாவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக சால்ட் மற்றும் நரைன் களமிறங்கினர். நரைன் 2 ரன்களில் ஆட்டமிழக்க , அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.  அவருக்கு அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் நித்திஷ் ராணாவும் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் சால்ட் நிதானமாக ஆடினார். அவருக்கு துணை நின்ற ரமன்தீப் சிங் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக ஆடிய சால்ட் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து இணைந்த ரிங்கு சிங் மற்றும் ரசல் இணை ஹைதராபாத் அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசல் 7 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற ரிங்கு சிங் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரசல் 64 ரன்களுடனும், ஸ்டாரக் 6 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றனர்.இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய தமிழ்நாட்டு வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்கு அடுத்தபடியாக மார்க்கண்டே 2 விக்கெட்டுகளும் கேப்டன் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் இணை சிறப்பான துவக்கம் தந்தது. பொறுமையாகவும் அவ்வப்போது அதிரடியையும் காட்டிய அந்த இணை முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் குவித்தது. அகர்வால் 32 ரன்களும் அபிஷேக் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களும்,  மார்க்ரம் 18 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்பு வந்த ஹென்றிச் கிளாசன், அப்துல் சமத் இணை பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அப்துல் சமத் 15 ரன்கள் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஹென்றிச் கிளாசன், சபாஷ் அகமது இணை கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.  சிக்ஸர்களில் மட்டுமே கவனம் செலுத்திய கிளாசன் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்படும் நிலையில் சபாஷ் அகமது மற்றும் ஹென்றிச் கிளாசன் ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.  கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது ரன் எதுவும் எடுக்காமல் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதன் மூலம் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 win for Kolkata as they beat Hyderabad ipl

ஐபிஎல் வரலாற்றில் சாதனை விலைக்கு எடுக்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 53 ரன்களை வாரி வழங்கினார்.  அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாமல் தோல்விக்கு காரணமாக அமைந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இளம் வீரர் ஹர்ஷத் ராணா சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தி கொல்கத்தா அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். கொல்கத்தா அணியில் ஹர்ஷத் ராணா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும்,  ரசல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

-வெ. அருண்குமார்