16 ஆவது ஐபிஎல் சீசனின் 61 ஆவது லீக் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 144 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்களையும் கான்வே 30 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் தலா 2 விக்கெட்களையும் வைபவ் அரோரா, ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
145 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 147 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிதிஷ் ரானா 57 ரன்களையும் ரிங்கு சிங் 54 ரன்களையும் எடுத்தனர். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஷிவம் துபே சஞ்சு சாம்சனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுவரை அவர் 19 சிக்ஸர்களை சுழல் பந்துவீச்சாளருக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.