இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 48 வது பிறந்தநாளாகும். இதனையொட்டி உலகமுழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் சச்சின் பெயரில் பல்வேறு ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்தநிலையில் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கடந்த மாதம் மிகக் கடினமான மாதமாக இருந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து அவர், "பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இது உண்மையாகவே எனது நாளை சிறப்பாக்கிவிட்டது. கடந்த மாதம் எனக்கு கடினமான மாதமாக இருந்ததது. எனக்கு கரோனா உறுதியானது. 21 நாட்கள் தனிமையில் இருக்கும்படி ஆனது. உங்களது பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துகளும், எனது குடும்பத்தின் பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துகளும், நண்பர்களும், மருத்துவர்களும், அவர்களது பணியாளர்களும் என்னை நேர்மறையான சிந்தனையில் வைத்திருந்ததுடன், குணமாகவும் உதவினர்" எனத் தெரிவித்தார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர் கரோனாவால் குணமானவர்கள் பிளாஸ்மா தானம் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் அனுமதி கிடைக்கும்போது தானும் பிளாஸ்மா தானம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், மருத்துவர்கள் என்னிடம் கூறிய செய்தியை, உங்களிடம் கூற விரும்புகிறேன். கடந்த வருடம் பிளாஸ்மா தானம் செய்யும் நிலையத்தை நான் திறந்து வைத்தேன். அப்போது அவர்கள், பிளாஸ்மா சரியான நேரத்தில் தரப்பட்டால், நோயாளிகள் சீக்கிரம் குணமடைவார்கள் எனத் தெரிவித்தனர். நான் தனிப்பட்ட முறையில், எனக்கு அனுமதி கிடைக்கும்போது பிளாஸ்மா தானம் செய்வேன். மருத்துவர்களிடமும் பேசிவிட்டேன்" எனக் கூறினார்.
Thank you everyone for your warm wishes. It's made my day special. I am very grateful indeed.
— Sachin Tendulkar (@sachin_rt) April 24, 2021
Take care and stay safe. pic.twitter.com/SwWYPNU73q
மேலும் அவர், "கரோனாவிலிருந்து குணமடைந்த நீங்கள் அனைவரும், மருத்துவர்களிடம் ஆலோசித்து, அனுமதி கிடைக்கும்போது தயவு செய்து இரத்த தானம் செய்யுங்கள். இது நிறைய பிரச்சனைகளைக் குறைக்கும். நமக்கு உடல் நலமில்லாமல் இருக்கும்வரை, நமது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.