9-ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி எனும் சாதனையை சாம் கரண்-இம்ரான் தாஹிர் ஜோடி படைத்துள்ளது.
13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 41-ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில், சென்னை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இத்தோல்வியின் மூலம் சென்னை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து, முதல் முறையாக ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
முதலில் பேட் செய்த சென்னை அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சென்னை அணி 50 ரன்களை தாண்டுமா என்பதே கேள்விக்குறியானது. ஒரு புறம் சென்னை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும், மறுமுனையில் நின்ற சாம் கரண் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஒன்பதாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சாம் கரண் மற்றும் இம்ரான் தாஹிர் ஜோடி நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணி 100 ரன்களைத் தாண்டியது.
9-ஆவது விக்கெட்டிற்கு இணைந்த சாம் கரண் மற்றும் இம்ரான் தாஹிர் ஜோடி சேர்த்த 43 ரன்களானது, ஐ.பி.எல் வரலாற்றில் 9-ஆவது விக்கெட்டிற்கு ஒரு ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்கள் எனும் புதிய சாதனையாகப் பதிவாகியுள்ளது.