Skip to main content

சச்சின் ஓனர்... விஜய்சேதுபதி தூதர்... களமிறங்கும் ‘தமிழ் தலைவாஸ்’…

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

2017–ஆம் ஆண்டு ப்ரோ கபடி சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் தலைவாஸ், இந்த ஆண்டு பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது. சென்ற முறை அனுபவமிக்க வீரர்கள் இல்லாமல் தடுமாறிய அணிக்கு பலம் சேர்க்க, இந்த முறை நல்ல அனுபவமிக்க வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கபடியை இன்னும் அதிகமாக தமிழ் மண்ணில் பிரபலபடுத்தும் நோக்கில், நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி ப்ரோ கபடி தொடருக்கான தமிழக தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

dd

 

 

ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் பிரசாத், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தெலுங்கு திரையுலகை சார்ந்த அல்லு அர்ஜுன், சிரஞ்சிவி மகன் ராம் சரண் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோர் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக உள்ளனர். விவோ ப்ரோ கபடி 6-வது சீசனுக்கான ஏலம் கடந்த  மே மாதம் நடைபெற்றது.  இதில் 58 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 422  வீரர்கள் கலந்து கொண்டனர்.  ஏலத்தில் 12  அணிகளும் குறிப்பிட்ட வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டனர். தமிழ் தலைவாஸ் அணியானது, இந்திய அணியின் கேப்டன் அஜய் தாகூர், அமித் ஹூடா, சி அருண் மற்றும் டி பிரதீப் ஆகியோரை தக்கவைத்துக்கொண்டது.

 

2017-ஆம் ஆண்டு கமல்ஹாசன் தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக இருந்தார். இந்த வருட தூதராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட்டை தாண்டி கபடியை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும், ப்ரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி பங்குபெரும் மைதானத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து தமிழ் தலைவாஸ் அணியை உற்சாகப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார். 

 

pp

 

தக்கவைத்துக்கொண்ட நான்கு வீரர்கள் தவிர 16 வீரர்களை தமிழ் தலைவாஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த காசிநாத பாஸ்கரன்,  இந்த ஆண்டு டெக்னிக்கல் டைரக்ட்டராக செயல்படுவார். இவர் 2016 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு புதிய பயிற்சியாளராக கேரளாவை சேர்ந்த எடச்சேரி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சீசன்களில் யு மும்பா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டவர். இந்த சீசனில் அனுபவமுள்ள வீரர்கள் மற்றும் இளம் வீரர்களைக்  கொண்டு தமிழ் தலைவாஸ் அணி களமிறங்குகிறது. இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டரான மன்ஜீத் சில்லர் மற்றும் ரைடர் ஜஸ்விர் சிங் போன்ற அனுபவமுள்ள வீரர்களுடனும், அமித் ஹூடா, சி அருண், டி பிரதீப் மற்றும் சுர்ஜீத் சிங் ஆகிய இளம் வீரர்களுடனும், புத்தம் புது பொலிவுடன் இந்த சீசனில் விளையாடுகிறது தமிழ் தலைவாஸ்.  ரைடிங்கை  பொறுத்தவரையில் கடந்த ஆண்டைவிட சிறப்பாக உள்ளது. அஜய் தாகூர், சுகேஷ் ஹெக்டே, சுர்ஜீத் சிங்,  ஜஸ்விர் சிங் போன்ற அனுபவமுள்ள வீரர்கள் மற்றும் அணில் குமார், ஜெயசீலன் போன்ற இளம் வீரர்கள்  இடம் பெற்றுள்ளனர். டிபன்டர் வீரர்களில் அமித் ஹூடா, சி அருண், டி பிரதீப், ஜே தர்சன்,  சுனில் குமார் மற்றும் டி கோபு ஆகியோர் குறிப்பிடத்தகுந்த வீரர்கள். ஆல் ரவுண்டர்களாக  மன்ஜீத் சில்லர் மற்றும் கொரிய வீரரான சான் சிக் பார்க் ஆகியோர் களமிறங்குவார்கள்.

 

pp

 

கேப்டன் அஜய் தாகூர் இதுவரை 80 போட்டிகளில் 529 ரைட் பாயிண்ட்கள் மற்றும் 20 டேக்கல் பாயிண்ட்கள் எடுத்து உள்ளார். ப்ரோ கபடி அனைத்து தொடர்களிலும் சேர்த்து நான்காவது அதிகமான ரைட் பாயிண்ட்கள் எடுத்த வீரராக உள்ளார்.   ஜஸ்விர் சிங், சுகேஷ் ஹெக்டே மற்றும் சுர்ஜீத் சிங் ஆகியோரும் அதிகளவு ரைட் பாயிண்ட்கள் எடுத்துள்ளனர். டிபன்டர்களில் அமித் ஹூடா 54 போட்டிகளில் 144 டேக்கல் பாயிண்ட்கள் எடுத்து உள்ளார். சுனில் குமார், இளம் வீரர்களான சி அருண் மற்றும் ஜே தர்சன் ஆகியோரும் அதிகளவு டேக்கல் பாயிண்ட்கள் எடுத்துள்ளனர். ஆல் ரவுண்டரான மன்ஜீத் சில்லர் 74 போட்டிகளில் 212 ரைட் பாயிண்ட்கள் மற்றும் 243 டேக்கல் பாயிண்ட்கள் எடுத்து உள்ளார். ப்ரோ கபடி தொடரின் நம்பர் 1 டிபன்டர் மன்ஜீத் சில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தலைவாஸ் அணியின் பலம்:
•    அனுபவமுள்ள ரைடர்கள் மற்றும் டிபன்டர்கள்
பலவீனம்:
•    ஒரே ஒரு ஆல் ரவுண்டர் மட்டுமே இருப்பது