ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில், பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியானதும் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரனான ரோகித் ஷர்மா பெயர் மூன்று தரப்பட்ட போட்டிகளிலும் இடம்பெறாததே இதற்கான காரணம். ஐ.பி.எல் போட்டிகளின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே ரோகித் ஷர்மா அணியில் இடம்பெறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதனையடுத்து, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின் இந்தியா திரும்ப இருப்பதால், டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் மட்டும் ரோகித் ஷர்மா சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
ரோகித் ஷர்மாவிற்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல், ரோகித் ஷர்மாவிற்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது எனப் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வந்தனர். இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வந்த ரோகித் ஷர்மா, முதல் முறையாகத் தன்னுடைய மௌனத்தைக் கலைத்துள்ளார்.
இது குறித்து ரோகித் ஷர்மா பேசுகையில், "நான் தொடர்ந்து மும்பை அணி நிர்வாகத்துடனும், பி.சி.சி.ஐ-யுடனும் தொடர்பில் இருந்து வருகிறேன். குறுகிய ஓவர் போட்டி என்பதால் என்னால் சமாளித்து விளையாட முடியும் என்று நான்தான் மும்பை அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டேன். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் என் முழுக்கவனமும் இருக்கும்.
தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் தற்போது குணமடைந்துள்ளது. டெஸ்ட் தொடர் விளையாடும் முன் எந்தத் தடங்கலும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது உள்ளேன். பிறர் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. காயம் ஏற்பட்டவுடன், அடுத்த இருநாட்களில் நான் யோசித்தது, அடுத்த 10 நாட்களில் நான் விளையாட முடியுமா இல்லையா என்பதுதான். என்னால் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாட முடியும் என்று நான்தான் முடிவெடுத்தேன். என்னால் முடியாது என்றால் நான் விளையாடியிருக்கவே மாட்டேன்" எனக் கூறினார்.
மேலும், பேசிய ரோகித் ஷர்மா, "எனது காயத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 11 நாட்களில் 6 போட்டிகள் நடைபெற உள்ளன. அடுத்த 25 நாட்கள் உடற்தகுதியில் கவனம் செலுத்தினால், ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும். இது எனக்கு எளிமையான முடிவு. மற்றவர்களுக்கு ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது என்று தெரியவில்லை" எனக் கூறினார்.