தென் ஆப்பிரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த வாரம் இனவெறியுடன் பேசியதாக சர்ச்சையில் சிக்கியது. டர்பனில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியின் போது, , பேட்டிங் செய்துகொண்டிருந்த தென் ஆப்பிரிக்க வீரர் பெகுல்க்வாயோவை பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமத் கருப்பர் என கூறி கிண்டல் செய்தார். 'ஏய் கருப்புப் பயலே, உன் அம்மா எங்கே? உனக்காக என்ன பிரார்த்தனைச் செய்ய சொன்னாய்' என சர்பராஸ் அகமத் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி சர்ச்சையானது. இதன் காரணமாக சர்பராஸ் மீது கண்டனங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து சர்பராஸ் தனது ட்விட்டர் பதிவு மூலம் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் டூ பிளேஸிஸ், சர்பராஸை நாங்கள் மன்னித்து விட்டோம், மேலும் இனி இந்த விஷயத்தில் ஐசிசி தான் முடிவெடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்துவரும் 4 போட்டிகளில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது விளையாட கூடாது என தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்து வரும் இரண்டு ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரு டி20 போட்டிகளிலும் சர்பராஸ் அகமது விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.