ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. சூப்பர் 4 சுற்றிற்கு 4 அணிகள் தயாரான நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜார்டன் 35 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் இரண்டு விக்கெட்களை எடுத்தார்.
130 ரன்கள் இலக்கை கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஒவரில் முதல் இரு பந்துகளில் சிக்சர்களை அடித்து நசீம் ஷா ஆட்டத்தை முடித்து வைத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷதாப் கான் 36 ரன்களை எடுத்தார்.
நேற்று ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்பட்டது. இதனால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போட்டியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் ஆவலுடன் பார்த்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிபெற்றுள்ளது. இது இந்திய அணி ஆசியா கோப்பையில் இருந்து வெளியேற வழிவகை செய்துவிட்டது.
போட்டியின் நடுவே ஆசிப் அலி 16 ரன்களை எடுத்திருந்த போது பரீத் அஹமது பந்தில் அவுட்டானார். அப்போது இரு வீரர்களுக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது ஆசிப் அலி தனது பேட்டால் அஹமதுவை அடிக்க ஓங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
போட்டி முடிந்த பிறகு இருநாட்டு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தின் இருக்கைகளை உடைத்தும் அதனை பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் மீது வீசி எறிந்தனர். இதனால் இரு நாட்டினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் மோதலில் ஈடுபட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.