இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியிலும் தோல்வியடைந்து இந்திய அணி தொடரை இழந்துள்ளது.
இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில், நிக்கோலஸ் ஆகியோர் முறையே 79 மற்றும் 41 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பின்னர் வந்த ப்ளண்டேல் மற்றும் டெய்லர் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது.
274 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாட தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்துடனேயே ஆடியது. ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜடேஜா மட்டுமே அரைசதம் கடந்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இந்திய அணி 49 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் எடுத்து. இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு 2014 ஆண்டு தான் கடைசியாக இந்தியாவுடனான இருதரப்பு ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியிருந்தது. அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய அணி உடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.