தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டைப் பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுரையின்படி கோரப்பட்டது. அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து, ‘புதிய கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழான ‘விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்’ என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிலம்ப விளையாட்டிற்கு 3 சதவீத இடஒதுக்கீடு என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புகளுக்காக ‘நேசம் மனிதவள மேம்பாட்டு மையம்’ சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மற்றும் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது. சென்னை, இராயபுரம் தனலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் நேற்று (27.09.2021) மாலை இவ்விழா நடைபெற்றது. நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் பாண்டிச்செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் முனைவர் சுடர்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது, “தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை தமிழக அரசு உலகறியச் செய்யும். தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலை தமிழ்நாட்டில் எங்கு தோன்றியது, எப்படி தோன்றியது என ஆய்வு செய்ய விரைவில் உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்படும். சிலம்ப விளையாட்டு வீரர்களுக்குத் தமிழக அரசு வேலையில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் சிலம்ப விளையாட்டை கற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, வடசென்னையில் சிலம்பம், கால்பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டிற்கென பிரத்யேக ஸ்டேடியம் அமைக்கப்படும். ஒலிம்பிக் விளையாட்டில் இடம்பெற்றுள்ள கார்ஃப்பால் விளையாட்டை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் அதை ஆய்வு செய்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில் மாணவர்களும், சிறுவர்களும் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.