இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான முகமது ஷஷாத் காயம் காரணமாக நாடு திரும்புவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் நடந்த போட்டிகளில் விளையாடினார். அதில் 0 மற்றும் 7 ரன்களில் அவர் ஆட்டமிழந்த நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும், அவருக்கு பதிலாக இக்ரம் அலி விளையாடுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில் இது குறித்து ஆப்கானிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு அவர் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அழுதபடியே கண்ணீருடன் பேசியுள்ள அவர், "எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. நான் விளையாடுவதற்கு முழுத்தகுதியுடன் இருக்கிறேன். ஆனால் என்னிடம் எதுவுமே கேட்காமல் கட்டாயப்படுத்தி என்னை நாட்டுக்கு திரும்ப கூறியுள்ளனர்" என கூறியுள்ளார். தற்போது இந்த விவகாரம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.