Skip to main content

போட்டிக்கு முன் வீரர்களிடம் சொன்ன வார்த்தை; போட்டி முடிந்து தோனி சொன்ன ரகசியம்

 

Dhoni's words to the players before the match; Dhoni's secret after the match

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன. அதன்படி குஜராத், சென்னை, லக்னோ, மும்பை என 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன.

 

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது. 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக 60 ரன்களை அடித்த ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டார். இதனால் 10 ஆவது முறையாக சென்னை அணி ஃபைனலுக்கும் நுழைந்தது.

 

போட்டி முடிந்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, “ஐபிஎல் மிகப் பெரியது, இது மற்றொரு இறுதி ஆட்டம் என்று கூற முடியாது. உலகின் முன்னணி வீரர்களுடன் கூடிய 8 அணிகளாக இருந்த ஐபிஎல் தொடர் இப்போது 10 அணிகளுடன் நடக்கிறது. அது இன்னும் கடினமானது. இது மற்றொரு இறுதிப் போட்டி என நான் சொல்லமாட்டேன். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடினமாக உழைத்துள்ளோம். அதன் காரணமாகவே இங்கு நின்று கொண்டுள்ளோம். தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை எங்களின் வீரர்களின் சிறப்பு தன்மைகள் வெளிப்பட்டன. ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்துள்ளனர் என நான் நினைக்கிறேன். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு போதுமான வாய்ப்புகள் கிட்டவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது அதை அவர்கள் அதை முழுமையாக பயன்படுத்தியுள்ளனர். 

 

குஜராத் மிகச் சிறந்த அணி. அவர்கள் சிறப்பாக சேஸ் செய்வார்கள். டாஸ் இழந்தது நல்லது என நினைக்கிறேன். இம்மாதிரியான சூழல் ஜடேஜாவிற்கு உதவுவதாக அமையும். அப்போது அவரது பந்துகளை அடிப்பது கடினம். அந்த நேரத்தில் அவர் பந்து வீசியது ஆட்டத்தை மாற்றியது. அதேபோல் ஜடேஜா - மொயின் அலி அமைத்த பார்ட்னர்ஷிப்பையும் மறக்க முடியாது. குறைவான ரன்களாக இருந்தாலும் இது போன்ற சூழலில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம். நாங்கள் அணிக்குள் நல்ல சூழலை உருவாக்க முயல்கிறோம். பந்துவீச்சாளர்களிடம் உங்களது பந்துவீச்சை மேம்படுத்துங்கள் என கூறுகிறோம். குறிப்பிட்ட பேட்ஸ்மேன் விக்கெட்டை எடுக்க மற்ற அணிகள் எம்மாதிரி திட்டமிடுகின்றன என பார்க்க சொல்கிறோம். அவர்களும் அதை பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஆட்டத்தை மேம்படுத்த பலரும் உதவுகிறார்கள்.

 

ஆடுகளம், சூழல் ஆகியவற்றைப் பார்த்து ஃபீல்டிங்கை மாற்றி அமைக்க வேண்டும். 2 - 3 பந்துகளுக்கு வீரர்களின் பீல்டிங்கை மாற்றி அமைத்துக்கொண்டே இருந்தேன். நீங்கள் ஃபீல்டிங் செய்யும் போது 2- 3 பந்துகளுக்கு இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தால் ஒரு வேளை எரிச்சல் வரலாம். ஆடுகளத்தின் தன்மை போன்றவற்றை பார்க்கும் போது என் உள்ளுணர்வு சொல்வதை நம்பினேன். அதன் காரணமாகவே, நான் வீரர்களிடம் வைத்த கோரிக்கை என் மீது கண் வைத்திருங்கள் என்பதுதான். நீங்கள் கேட்ச் தவறவிட்டால் எதுவும் சொல்லப் போவதில்லை. எப்போதும் என்னைப் பார்த்த வண்ணம் இருங்கள் என கூறினேன். 

 

நான் மீண்டும் சென்னையில் விளையாடுவேனா என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் 8 முதல் 9 மாதங்கள் இருக்கிறது. அதனால் இப்போது சொல்ல முடியாது. டிசம்பர் மாதம் மினி ஏலம் நடக்கும். அதனால் இந்த தலைவலியை இப்போதே ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும். அது குறித்து முடிவெடுக்க போதுமான நேரம் இருக்கிறது. எப்போதும் சென்னை அணியுடனே இருப்பேன். அது ப்ளேயிங் 11ல் இருந்தாலும் சரி அப்படி இல்லை என்றாலும் சரி” எனக் கூறினார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !