கிரிக்கெட் என்றால் ஜென்டில்மேன் ஆட்டம் என்ற மறுபெயர் உண்டு. ஆனால், அதைக் கெடுக்கும்விதமாக ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் நடந்துகொண்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜிம்பாப்வேயில் வைத்து பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் மரியாதை நிமித்தமாக கைக்குலுக்கிச் சென்றனர். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது கையை நீட்ட மேக்ஸ்வெல் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றார். இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவ, இதுதான் ஜென்டில்மேன் ஆட்டமா? விளையாட்டு உணர்வே மேக்ஸ்வெல்லுக்கு இல்லை! என விமர்சனங்கள் எழுந்தன.
தன்மீதான விமர்சனங்கள் குறித்து மேக்ஸ்வெல், ‘பாகிஸ்தானின் வெற்றிக்கு வாழ்த்துகள். ஃபகர் சமான் மற்றும் ஷோயிப் மாலிக்கை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. சர்ஃபராஸுக்கு கைக்குலுக்காமல் சென்றது குறித்து விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், வேண்டுமென்றே அப்படி நடந்துகொள்ளவில்லை. நான் அப்படி நடப்பவனும் கிடையாது. சர்ஃபராஸை நான் கவனிக்கவில்லை. அவரை விடுதி அறையில் சந்தித்து நிச்சயம் பேசுவேன்; அந்த அணியின் வெற்றிக்காக வாழ்த்துவேன்’ என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
போட்டியின் போது மேக்ஸ்வெல் மற்றும் சர்ஃபராஸ் ஆகிய இருவரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். அதுவே, மேக்ஸ்வெல்லின் செயல்பாட்டுக்குக் காரணம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.