இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் சென்னை, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட மைதானங்களில் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கரோனா காரணமாக சில வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலகி தங்களது தாயகத்துக்கு திரும்பி உள்ளனர். மேலும், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகளின்றி உயிரிழந்து வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று சில வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோல், சமூக வலைதளங்களிலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார், சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும், பேருந்து கிளீனர் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதியானது. மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹாவுக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஆகியோரும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
வீரர்களுக்கு அடுத்தடுத்து கரோனா உறுதியானதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள், தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், நிலைமை சரியானதற்கு பிறகு மீண்டும் திட்டமிடப்பட்டு இந்த தொடர் நடத்தப்படும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.