கிறிஸ் கெயில் அணிக்கு எப்போது திரும்புவார் என்ற கேள்விக்கு, பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பதிலளித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, இந்திய வீரர் கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். தற்போதைய தொடரில், இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் கண்டுள்ளது. கடந்த தொடர்களை ஒப்பிடும்போது, இம்முறை பஞ்சாப் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கூடுதல் பலத்துடன் இருக்கிறது. இதனால், நடப்புத் தொடரில் அவ்வணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில், கடந்த இரு போட்டிகளிலும் அணியில் இடம்பெறாததால் அவர் எப்போது அணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கிறிஸ் கெயில் அணியில் இணையும் போது, அணிக்கு அது கூடுதல் பலமாக இருக்கும் என்பதால் பஞ்சாப் அணி ரசிகர்கள் அதை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கே.எல்.ராகுல், "கிறிஸ் கெயில் சரியான நேரத்தில் வருவார். அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் இருப்பது என்பது கடினமான ஒன்று. தற்போதைய சூழலில் விளையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் போட்டி சற்று சறுக்கலாக அமைந்தாலும், எங்கள் வீரர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்" எனக் கூறினார்.