நடுவர் அளித்த தவறான தீர்ப்பு பஞ்சாப் அணியின் வெற்றியைப் பறித்ததால், அம்முடிவை எதிர்த்து பஞ்சாப் அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் மேல்முறையீடு செய்துள்ளது.
13-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இறுதி ஓவர் வரை பரபரப்பாக சென்ற அப்போட்டியில், 20 ஓவர் முடிவில் இரு அணிகளும் சமநிலை வகித்தன. வெற்றியைத் தீர்மானிப்பதற்கு நடந்த சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
டெல்லி அணி வீரர் ரபடா போட்டியின் 19-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை அடித்துவிட்டு மயங் அகர்வால் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்முனையில் நின்ற கிறிஸ் ஜோர்டனும் துரிதமாக ஓடினார். அவ்வோட்டத்தின் முடிவில், கிறிஸ் ஜோர்டன் முதல் ரன்னை முழுமையாக முடிக்கவில்லை என்று கூறி களத்தில் இரண்டாவது நடுவராக இருந்த நிதின் மேனன் இரு ரன்கள் வழங்க மறுத்தார். பின்பு டீவி ரீஃபிளேயில் பார்க்கும்போது அவர் முதல் ரன்னை முழுமையாக முடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடியது தெளிவாக தெரிந்தது. நிதின் மேனன் இம்முடிவை சரியாக வழங்கியிருந்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக முடிவு மாறியிருக்கும்.
நடுவரின் இந்த முடிவால் பஞ்சாப் அணி ரசிகர்கள் மட்டுமின்றி, மூத்த வீரர்கள், அணி நிர்வாகம் எனப் பலர் அதிருப்தியடைந்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், 'ஆட்டநாயகன் விருதை நடுவருக்கு வழங்குங்கள்' எனக் காட்டமாக தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தனார். இந்நிலையில், நடுவரின் இந்த முடிவை எதிர்த்து போட்டி நடுவரிடம் பஞ்சாப் அணி நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.
இதுகுறித்து அவ்வணியின் தலைமை அதிகாரி சதீஸ் மேனன் கூறுகையில், "நடுவரின் தவறான முடிவு குறித்து போட்டி நடுவரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம். மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான். ஐபிஎல் போன்ற தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த ஒன்றில் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இது எங்களின் அடுத்த சுற்று வாய்ப்பைக் கூட பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. விதிமுறையை மறுபரிசீலனை செய்யவேண்டும்" எனக் கூறினார்.