சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளுக்கு தடைவிதிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், சென்னை அணி சொந்த மண்ணில் ஆடும் போட்டிகள் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியின் போது 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தபோது, தோனி தனித்து நின்று அபாரமாக விளையாடினார். 44 பந்துகளைச் சந்தித்த அவர் 79 ரன்கள் எடுத்திருந்தார். குறிப்பாக ஆட்டம் முழுவதும் தோனி முதுகுப்பகுதியில் ஏற்பட்ட வலியுடனேயே ஆடிக்கொண்டிருந்தார். இதனால், அவர் அடுத்த போட்டியில் மீண்டும் களமிறங்குவதில் சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும், அன்றைய போட்டியில் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அதேபோல், கொல்கத்தா அணியுடனான போட்டியின்போது, சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா கால்த்தசை வலி காரணமாக அவதியுற்றார். இதனால், அடுத்து நடக்கவிருக்கும் இரண்டு போட்டிகளில் அவர் களமிறங்கமாட்டார் என அணியின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சியில் ரெய்னா கலந்துகொண்ட நிலையில், அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்பது உறுதியானது. ஆனால், தோனி களமிறங்குவதில் தொடர்ந்து சந்தேகமே நீடித்தது.
இந்நிலையில், புனே மைதானத்தில் கேப்டன் தோனியும் பயிற்சியில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், இன்றைய போட்டியில் அவரும் களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது. தல, சின்னத்தல என ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி மற்றும் ரெய்னா இன்றைய போட்டியில் களமிறங்குவது சென்னை அணிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, இந்த சீசனில் களமிறங்கிய நிலையில், மீண்டும் மோதும் போட்டி இதுவென்பதால் எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன. இந்த இரண்டு அணிகளுமே முந்தைய போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய முனைப்போடு விளையாடும் என எதிர்பார்க்கலாம்.