இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தனது முதல் கடற்கரை மல்யுத்த தேசிய போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தவுள்ளது. ஆகஸ்ட் 28 முதல் 30 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
மல்யுத்தத்தின் ஒரு பிரிவான கடற்கரை மல்யுத்தம், அண்மைக்காலங்களில் அதிக கவனம் பெற்றுவரும் விளையாட்டாக மாறியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இதற்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகச் சொல்லத் தகுந்த அளவிலான வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்த விளையாட்டு, 2024ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கடற்கரை மல்யுத்த வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதன்முறையாக தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்த போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய மல்யுத்த சங்கத்தின் அனுமதியுடன் ஆகஸ்ட் 28 முதல் 30 வரை மாமல்லபுரத்தில் உள்ள அரசு பீச் ரெசார்ட் வளாகத்தில் இந்த தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் 70, 80, 90, 90+ கிலோ என நான்கு வகைகளிலும், மகளிருக்கான பிரிவில் 50, 60, 70, 70+ கிலோ என நான்கு வகைகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய மல்யுத்த சங்கத்தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரிஜ்புஷன் சரண் சிங் ஆகஸ்ட் 28 அன்று இப்போட்டியைத் துவங்கிவைக்கிறார். இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியா, வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளனர். அதேபோல, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறும் நிகழ்வில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.